Published : 09 Dec 2023 08:19 AM
Last Updated : 09 Dec 2023 08:19 AM

சென்னையில் 43 இடங்களில் இன்னும் வெள்ளநீர் வடியவில்லை: கனமழைக்கு இதுவரை 16 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு 450-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதிகளில் வசித்த பொதுமக்கள் குடிநீர், உணவு, மின்சாரம் இன்றி சில நாட்கள் தவித்தனர். கனமழைக்கு சென்னை வருவாய் மாவட்டத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வேளச்சேரியில் பள்ளத்தில் விழுந்த கன்டெய்னரில் இருந்து 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்றைய நிலவரப்படி பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில் இன்னும் 43 இடங்களில் வெள்ளநீர் வடியவில்லை என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், 488 பேருந்து தட சாலைகளில் 67 இடங்களில் மட்டும் மழைநீர்த் தேக்கம் இருந்து வருகிறது. இவற்றில் 57 இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 இடங்களில் மழைநீர் வெளியேற்றும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 7, 8-ம் தேதிகளில் 8,511 நடைகளில் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

தற்போது 65 நிவாரண முகாம்களில் 14,268 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் வாகனங்களின் மூலம் இதுவரை 47 லட்சத்து 79 ஆயிரத்து 222 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சி சார்பில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 290 ரொட்டி பாக்கெட்கள், 7 லட்சத்து 1,941 குடிநீர் பாட்டில்கள், 8 லட்சத்து 47 ஆயிரத்து 633 பிஸ்கெட் பாக்கெட்கள், 51 ஆயிரத்து 733 பால் பவுடர் பாக்கெட்கள், 14 ஆயிரத்து 574 பால் பாக்கெட்கள், 61 ஆயிரத்து 380 கிலோ அரிசி மற்றும் 1,739 கிலோ பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1,512 மரங்கள் விழுந்துள்ளன. அவற்றில் 1,303 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 209 மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றன. மாநகரில் 22 சுரங்கப்பாதைகளும் தற்போது மழைநீர் தேக்கமின்றி போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளன. டிச.1 முதல் 8-ம் தேதி வரை நடமாடும் மருத்துவ முகாம்கள் மற்றும் நிலையான மருத்துவ முகாம்கள் என 1,060 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 78 ஆயிரத்து 286 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x