Published : 08 Dec 2023 07:49 PM
Last Updated : 08 Dec 2023 07:49 PM

“ரூ 2,191 கோடிக்கே இதுவரை மழைநீர் வடிகால் பணி நிறைவு” - ‘ரூ.4,000 கோடி’ விவகாரத்தில் கே.என்.நேரு விளக்கம்

சென்னை: “மழைநீர் வடிகால் பணிகளின் மதிப்பீடு ரூ 5,166 கோடி. ஆனால், இதுவரை ரூ.2,191 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதித் தொகை இருக்கிறது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது” என்று தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

சென்னையில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் எதிர்க்கட்சிகள் மழைநீர் வடிகால் பணிகளுக்கான ரூ.4,000 கோடி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்துவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "கொசஸ்தலை ஆறு வடிகால் (AG-ADB Fund), அதன் நீளம் 269 கி.மீ , ஆனால் அதற்கான தொகை ரூ.3,220 கோடி, அதில் 523 கி.மீட்டருக்கு பணிகள் முடிவடைந்துள்ளது. இதற்காக ரூ.3,220 கோடியில் ரூ.1,903 கோடி செலவழித்து பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

கோவளம் வடிகால் (ஜெர்மன் வங்கி நிதி), 360 கி.மீட்டர் நீளத்துக்கு ரூ.1,714 கோடி மதிப்பீட்டில் 162.72 கி.மீட்டருக்கு பணிகள் முடிவடைந்துள்ளது. இதற்காக செலவான தொகை ரூ.220 கோடியே 24 லட்சம். இப்படி எதிர்க்கட்சிகள் கூறும் 4 ஆயிரம் கோடி இதுதான். இப்போது நான் கூறிய பட்டியலின்படி, ரூ.5,900 கோடி வருகிறது. இந்த 5,900 கோடி ரூபாய்க்கான பணிகளில் இன்னும் வேலை முடியவில்லை. வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது.

இதுவரை செலவான தொகை என்றால், ரூ.2,000 கோடிதான் செலவாகி உள்ளது. அதில் எஸ்டிஎம்எஃப்-ல் 59.49 கி.மீட்டர் நீளத்துக்கான கால்வாய் பணிகளுக்கான மதிப்பீடு ரூ.232 கோடி. 47.78 கி.மீட்டருக்கான பணிகள் முடிந்துள்ளது. இதற்காக ரூ.68.35 கோடி செலவாகியுள்ளது. இவ்வாறு இந்த ரூ.5,166 கோடியில் இதுவரை ரூ.2191 கோடிதான் செலவு செய்யப்பட்டுள்ளது. மீதித்தொகை இருக்கிறது. அதற்கான பணிகளும் நடந்து வருகிறது" என்று அவர் கூறினார்.

அண்ணாமலை கேள்வி: அமைச்சர் கே.என்.நேருவின் விளக்கத்துக்குப் பிறகு கேள்வி எழுப்பியுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “மழைநீர் வடிகால் பணிகள் 98% நிறைவு பெற்றுவிட்டதாகவும், ஒரு மணி நேரத்தில் 20 செ.மீ மழையால் தேங்கும் நீர் வடியும் அளவுக்கு திறன் இருக்கிறது என்றும் கடந்த மாதம் திமுக அமைச்சர் கே.என்.நேரு கூறினார். ஆனால், இன்றோ இதுவரை 42% அளவில்தான் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அவர் கூறியதாக தகவல் வந்துள்ளதே” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, “முதல்வரும், திமுக அமைச்சரும் சுமார் ரூ.4,000 கோடியில் சென்னை மாநகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்திருக்கிறோம். மழை பெய்தால் சொட்டு தண்ணீரும் தேங்காது என வீர வசனம் பேசினார்கள். ஆனால், சென்னை மாநகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆக, ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்தும் ஏன் தண்ணீர் வடியவில்லை?” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x