Published : 08 Dec 2023 04:54 PM
Last Updated : 08 Dec 2023 04:54 PM
மதுரை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் பொறியியல் பணித் தேர்வுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் பாபநாசத்தைச் சேர்ந்த பிரகாஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'டிஎன்பிஎஸ்சி 332 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பொறியியல் சேவை பணித்தேர்வுக்கான அறிவிப்பு 13.10.2023-ல் வெளியிடப்பட்டது. இப்பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு 6.1.2024-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் பணிக்கான தேர்வுகளில் ஒவ்வொரு தேர்வு முடிந்ததும் இறுதி விடைக்குறிப்பு மற்றும் ஓஎம்ஆர் நகல் வெளியிடப்படாது.
இரு கட்ட தேர்வு, நேர்முகத் தேர்வு முடிந்த பிறகே இறுதி விடை குறிப்பு வெளியிடப்படும் என தேர்வு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த முறைப்படி டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைமுறைகள் முடிய 3 ஆண்டுகள் ஆகும். இந்த 3 ஆண்டுகளில் இரு கட்ட தேர்வுகளின் விடைத்தாள் நகல் வெளியிடப்படாமல் தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியலை வெளியிடுவது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்காதது சட்டவிரோதம்.
எனவே, டிஎன்பிஎஸ்சி பொறியியல் தேர்வில் தேர்வு தாள் மதிப்பீடு முடிந்ததும் விடைக்குறிப்புகளை வெளியிடவும், உத்தேச விடைக் குறிப்புகள், இறுதி விடைக் குறிப்புகளையும் வெளியிடவும், பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், தேர்வு செய்யப்படாதவர்களின் கட்-ஆப் மதிப்பெண்ணை வெளியிடவும் உத்தரவிட வேண்டும். அதுவரை டிஎன்பிஎஸ்சியின் ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் தேர்வு அறிவிப்புக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, மனு டிஎன்பிஎஸ்சி செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜன.9-க்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT