Published : 08 Dec 2023 04:55 AM
Last Updated : 08 Dec 2023 04:55 AM

புயல் சேதத்தை மதிப்பிட மத்திய குழு விரைவில் வருகை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனான ஆலோசனைக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் தகவல்

தமிழ்நாட்டில் 'மிக்ஜாம்' புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்து, இடைக்கால நிதியுதவி கோரும் கோரிக்கை மனுவை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் அளித்தார்.

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புயலால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட மத்திய குழு விரைவில் வருகை தர உள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்உடனான ஆலோசனைக்கு பிறகு முதல்வர்ஸ்டாலின் தெரிவித்தார்.

மிக்ஜாம் வெள்ள பாதிப்புகளை பார்வையிட நேற்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்தார்.பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு, தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

புயல், வெள்ள பாதிப்பை ஆய்வு செய்தமத்திய அமைச்சருக்கு தமிழக மக்கள் சார்பிலும், அரசு சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சென்னையின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பெய்த பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீண்டு, சென்னை நகரமும், மக்களும் இயல்புநிலைக்கு வரத் தொடங்கியுள்ளனர். இந்த பெரும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுத்து வருகிறது.

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது.

சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள் போன்ற பொதுக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கவும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் ஏதுவாக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5060 கோடி நிதி வழங்கும்படி பிரதமருக்கு ஏற்கெனவே நான் கோரிக்கை விடுத்திருந்தேன். நமது கோரிக்கைகள் குறித்த கோரிக்கை மனுவை மத்திய அமைச்சரிடம் அளித்துள்ளேன். இழப்பீடுகளை மதிப்பீடு செய்ய மத்திய அரசின் குழு ஒன்று விரைவில் தமிழகம் வர உள்ளது. தமிழக அரசின் இந்த கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நிதியுதவியை மத்திய அரசுவிரைவில் வழங்கும் என மத்திய அமைச்சர்உறுதியளித்துள்ளார். நிவாரணப் பணிகளை முழுவீச்சில் தொடர்ந்து மேற்கொண்டு, அனைத்து பகுதிகளையும் இயல்பு நிலைக்கு விரைவில் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து எடுக்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

தமிழகத்துக்கு ரூ. 450 கோடி விடுவிப்பு: பின்னர் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளால் பிரதமர் மோடி மிகுந்ததுயரமடைந்துள்ளார். இந்த குழப்பமானசூழலை பிரதமர் மோடி கண்காணித்துவருவதுடன், முதல்வர் ஸ்டாலினுடனும் பேசியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவ உத்தரவிட்டுள்ளார். இங்குள்ள சூழல் குறித்து தனிப்பட்ட முறையில் கண்காணிக்கவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் எனக்கு அவர்உத்தரவிட்டுள்ளார். ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர பாதுகாப்புப் படை, வானிலை ஆராய்ச்சி மையம், துணை ராணுவம் உள்ளிட்ட அனைத்து மத்திய அரசின் அமைப்புகள், வெள்ளத்தால் ஏற்பட்ட துயரை தணிக்கும் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன. பாதிப்பு நிலவரத்தை அறிய, நான் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தேன்.

அதன்பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினேன். தமிழக அரசு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினேன். இங்குள்ள சூழலை மாற்ற மத்திய அரசுதன்னால் இயன்ற முயற்சிகளை செய்யும். தேவைப்படும் பட்சத்தில் மேலும் விரிவுபடுத்துவோம். தமிழக நலனுக்காக மத்திய அரசு தன்னை பணித்துள்ளது. மக்களின் பாதிப்பை நீக்க மத்திய அரசு அமைப்புகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் இதை அறிய முடியும்.

மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசு, தமிழகத்துக்கு ரூ.450 கோடியை விடுவிக்க உள்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே, முதல் தவணையாக ரூ.450 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக சென்னையில் வெள்ள பாதிப்புகள் மீண்டும் மீண்டும் ஏற்பட்டு வருகிறது.

எனவே, தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் கீழ், சென்னை வடிகால் திட்டத்துக்கு ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைக்கு ரூ.561.29 கோடி மதிப்பிலான வெள்ளத் தணிப்பு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், ரூ.500 கோடி மத்திய நிதியும் அடங்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சந்திப்பின் போது, மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x