Published : 08 Dec 2023 04:17 AM
Last Updated : 08 Dec 2023 04:17 AM
சென்னை: சென்னை வந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை, ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். பின்னர், பாதிப்புகள், நிவாரணம் குறித்து தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார்.
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மீட்பு, நிவாரணம், சீரமைப்புக்காக இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என்றும், மத்திய குழுவினரை விரைவில் அனுப்பி பார்வையிட்டு, நிதியை விரைவாக வழங்குமாறும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதினார். மழை பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றத்திலும் திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. நேற்று முன்தினம் பேசி, விரைந்து நிவாரணம் வழங்க வலியுறுத்தினார்.
இந்நிலையில், புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று காலை டெல்லியில் இருந்துவிமானம் மூலம் சென்னை வந்தார்.மத்திய தகவல் ஒலிபரப்பு துறைஇணை அமைச்சர் எல்.முருகன்,தேசிய பேரிடர் மேலாண்மைஆணைய செயலர் கமல் கிஷோர் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.
தொடர்ந்து, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, ஹெலிகாப்டரில் சென்று ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் வெள்ள சேதம், பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.
பிறகு, தலைமைச் செயலகம் வந்தராஜ்நாத் சிங்கை, வாகனம் நிறுத்தும் பகுதிக்கு வந்து முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். தொடர்ந்து, முதல்வர், மத்திய, மாநில அமைச்சர்கள், அரசுஉயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த3, 4-ம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மொத்தம்109.41 செ.மீ. மழை பெய்தது, சாலைகள், பாலங்கள், பொது கட்டிடங்கள் என பல்வேறு உள்கட்டமைப்புகள் சேதம் அடைந்திருப்பது,தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருப்பது, இதன் காரணமாக, பலலட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விளக்கமாக தெரிவிக்கப்பட்டது. மீட்பு, நிவாரண பணி குறித்தும் விளக்கப்பட்டது.
வெள்ள சேதங்களை சீரமைக்க இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதை தெரிவித்து, இடைக்கால நிவாரணத் தொகையை விரைவில் வழங்க வேண்டும் என்றுமுதல்வர் கேட்டுக் கொண்டார். கோரிக்கை மனுவையும் அளித்தார்.
முன்னதாக, புயல் பாதிப்புகளை உடனடியாக வந்து பார்வையிட்டதற்காக ராஜ்நாத் சிங்குக்கு முதல்வர் நன்றி தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, ராஜ்நாத் சிங் நேற்று மதியம் 2.40 மணிக்கு மீண்டும் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
பேரிடர் நிதி ரூ.450 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவு: புதுடெல்லி: மிக்ஜாம் புயலால் தமிழகம், ஆந்திரா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 2 மாநிலங்களிலும் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, 2-ம் கட்ட மாநில பேரிடர் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.450 கோடி, ஆந்திராவுக்கு ரூ.493.60 கோடியை முன்கூட்டியே வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘எக்ஸ்’ வலைதள பதிவில் நேற்று தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, டிசம்பரில் 2 தவணையாக மாநில அரசுகளுக்கு பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்குகிறது. இதன்படி, கடந்த ஜூலையில் முதல்கட்ட பேரிடர் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.450 கோடி, ஆந்திராவுக்கு ரூ.493.60 கோடி வழங்கப்பட்டது. இரு மாநிலங்களுக்கும் இம்மாத இறுதியில் 2-ம் கட்ட பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக தமிழகம், ஆந்திராவுக்கு இந்த நிதியை முன்கூட்டியே வழங்க பிரதமர் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT