Published : 08 Dec 2023 06:56 AM
Last Updated : 08 Dec 2023 06:56 AM

சென்னையில் 3-வது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிப்பு: தனியார் நிறுவன பாலை அதிக விலைக்கு வாங்கும் நிலை

சென்னை: சென்னையில் 3-வது நாளாக நேற்றும் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் தனியார் நிறுவன பாலை மக்கள் அதிக விலைக்கு வாங்கிச்செல்லும் நிலை ஏற்பட்டது. கனமழையால் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், அத்தியாவசியத் தேவைகளான பால், குடிநீர், உணவு ஆகியவை கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களாக பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. குறைவான அளவு பால் வந்ததால், அதை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உருவானது.

பல இடங்களில் ஆவின், தனியார் நிறுவன பால் பாக்கெட்கள் விலையை பல மடங்கு உயர்த்திவிற்பனை செய்தனர். இந்நிலையில், ஆவின் பால் விநியோகம் வியாழக்கிழமை சீராகிவிடும் என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்திருந்தார். ஆனால், சென்னையில் 3-வது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது. பெரம்பூர், கொரட்டூர், வியாசர்பாடி, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், போரூர், சூளைமேடு, எம்எம்டிஏ காலனி, கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் ஆவின் பால் கிடைக்கவில்லை. மாதாந்திர அட்டைதாரர்களுக்கு மட்டும் ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டது.

அதேநேரம், தனியார் நிறுவனங்களின் பால் தட்டுப்பாடு இன்றி கிடைத்தது. பல இடங்களில் கூடுதல்விலைக்கு தனியார் நிறுவன பால் பாக்கெட்களை வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டது. சில இடங்களில் மிகத் தாமதமாக ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டது. இதுகுறித்து தமிழக பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி கூறியதாவது: சென்னையில் பல்வேறு இடங்களில் 3-வது நாளாக ஆவின் பால் பற்றாக்குறை ஏற்பட்டது. சில இடங்களில் மிகத் தாமதமாக பால் வந்தது. சில இடங்களில் டிலைட் பால், பச்சை நிற பாக்கெட் பால் மட்டும் விநியோகம் செய்யப்பட்டது. இதில், பச்சை நிற பால் பாக்கெட் திரிந்து கெட்டுப்போனது. இதனால், பொதுமக்கள், முகவர்கள் பாதிக்கப்பட்டனர். ஆவின் பாலை உரிய நேரத்தில் விநியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறுகையில், “சென்னைக்கு தினசரி 14.70 லட்சம் லிட்டர் ஆவின் பால் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். தொடர் மழையால், அம்பத்தூர் ஆலை செயல்படவில்லை. அதே நேரத்தில், சோழிங்கநல்லூர், மாதவரம் பால் பண்ணைகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவியது. இதனால், வாகனங்களைச் சரியான நேரத்தில் இயக்க முடியாத நிலை இருந்தது. இப்பிரச்சினை தற்போது சரியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் பால் விநியோகம் 100 சதவீதம் சரியாகிவிடும்” என்றனர். இதற்கிடையில், சென்னையில் அசோக்நகர், கேகே நகர் உட்பட சில இடங்களில் உள்ள பாலகங்களில் ஆவின் பால் விநியோகத்தை பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வையிட்டார். மேலும், பால் தேவைப்பட்டால் உடனுக்குடன் அதிகாரிகளுக்கு தெரிவிக்க அறிவுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x