Published : 08 Dec 2023 07:17 AM
Last Updated : 08 Dec 2023 07:17 AM
சென்னை: முக்கிய சாலைகளில் வெள்ளநீர் வடிந்த நிலையில், அப்பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நேற்று தீவிர தூய்மைப் பணி தொடங்கியது. இதற்காக தூய்மைப் பணியாளர்கள் ஓய்வின்றி உழைத்து வருகின்றனர். சென்னை மாநகரப் பகுதியில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக மாநகரமே கடந்த 4, 5 தேதிகளில் ஸ்தம்பித்தது. பல்லாயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கடைகளில் கழிவுநீர் கலந்த வெள்ளநீர் புகுந்தது.
மழையால் மாநகராட்சியின் பேட்டரி வாகனங்கள் நீரில் மூழ்கியதாலும், கொடுங்கையூர், பெருங்குடிஆகிய குப்பை கொட்டும் வளாகங்களுக்கு லாரிகள் செல்ல முடியாதஅளவுக்கு சாலைகளில் மழை நீர்தேங்கி இருப்பதாலும், வீடு வீடாக குப்பை சேகரிப்பை கடந்த 3-ம் தேதி முதல் மாநகராட்சி நிர்வாகம் நிறுத்தி இருந்தது. இதனால் பொதுமக்கள் ஆங்காங்கே பொது இடங்கள், சாலையோர பகுதிகள், காலி இடங்களில் குப்பைகளை கொட்டி வந்தனர். இதனால் மாநகரில் பல இடங்களில் குப்பை குவியல்கள் அதிக அளவில் இருந்தன.
மேலும் வெள்ளம் வீடுகளுக்குள்புகுந்ததால் சேதமடைந்த சோபா, மெத்தை, துணிகள் போன்றவற்றை பொதுமக்கள் வெளியில் கொட்டி வருகின்றனர். மரங்கள் விழுந்து ஏற்பட்ட குப்பையும் ஆங்காங்கே சாலையோரங்களில் கிடக்கின்றன. தற்போது மழைநீர் வடிந்துவரும் நிலையில் நேற்று முதல் தீவிர தூய்மைப் பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இப்பணிகளை தலைமைப் பொறியாளர் (திடக்கழிவுமேலாண்மை) என்.மகேசன் நேரில் ஆய்வு செய்தார். சாலையோரங்களில் 4 நாட்களாக தேங்கிக் கிடந்த வீட்டு குப்பை,வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பைகள் போன்றவற்றை தூய்மைப் பணியாளர்கள் சேகரித்து வாகனங்களில் எடுத்துச் சென்று அகற்றினர்.
மேலும் சேறு, சகதிகளையும் அகற்றி அப்பகுதிகளில் பிளீச்சிங் பவுடர்களை தூவினர். கோவை மாநகராட்சி பணியாளர்கள் புளியந்தோப்பு பகுதியில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு ஏதும் வழங்கப்படவில்லை என வருத்தம் தெரிவித்தாலும், சென்னை மீட்கும் பணிக்காக உழைக்கிறோம் என்று பெருமையாக கூறினர். தீவிர தூய்மைப் பணி நேற்று தொடங்கினாலும், அவர்கள் கடந்த 4 நாட்களாகவே ஓய்வின்றி உழைத்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT