Published : 24 Jan 2018 10:46 AM
Last Updated : 24 Jan 2018 10:46 AM
போக்குவரத்து போலீஸார் வாகன ஓட்டிகளிடம் நடத்தும் விசாரணையை அறிய உதவும் ‘பாடி ஒன்’ நவீன கேமரா மதுரை உட்பட 12 மாநகராட்சிகளில் பரிசோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் அபராதம் வசூலித்தல், விசாரணை செய்தல் உள்ளிட்ட போலீஸாரின் செயல்பாடுகள் சில நேரம் விமர்சனத்துக்குள்ளாகிறது. இதை தவிர்க்க கேரளா, தெலுங்கானா மாநிலங்களில் போக்குவரத்து போலீஸாருக்கு ‘ பாடி ஒன் ’ கேமரா வழங்கப்பட்டுள்ளது. பணியின்போது, போலீஸாரின் சட்டைக் காலரில் இந்த கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இதன் மூலம் போலீஸாரின் செயல்பாட்டை கண்காணிக்க முடியும்.
தமிழகத்தில் 12 மாநகராட்சி பகுதிகளில் பரீட்சார்த்தமாக ‘பாடி ஒன்’ கேமரா திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மதுரை தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்வினுக்கு ‘பாடி ஒன் ’ கேமரா வழங்கப்பட்டு, அவர் பயன்படுத்தி வருகிறார். இதன்மூலம் விசாரணை பேச்சுகள், அபராத விவரங்கள் கேமராவில் பதிவாகும். விசாரணையின்போது, தவறுக்கு இடமளிக்காத வகையில், போலீஸாரின் செயல்பாடுகளை அதிகாரிகள் அறிய முடியும். இக்கேமராவில் 32 ஜிபி மெமரி கார்டு பொருத்தலாம். கேமராவிலுள்ள தகவல்களை சிஸ்டத்தில் பதிவிறக்கம் (டவுன் லோடு) செய்த பின்னரே தகவல்களை அழிக்க முடியும். கேமராவின் விலை ரூ.1 லட்சம். டிஸ்பிளே வசதி உள்ளது. பதிவு செய்யும்போது கேமரா செயல்பாடுகளை பார்த்துக் கொள்ளலாம். போட்டோவும் எடுக்கலாம்.
இது பற்றி செல்வின் கூறியதாவது: ‘‘எங்களின் பணிக்கு இந்த கேமரா மிகவும் உதவியாக இருக்கும். போலீஸார், வாகன ஓட்டிகளின் செயல்பாடுகளை அறிய முடியும். யாரும் தவறு செய்ய முடியாது. இதன் பேட்டரி சுமார் 8 மணி நேரம் வரை செயல்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT