Published : 25 Jan 2018 09:00 AM
Last Updated : 25 Jan 2018 09:00 AM
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க புதிய முறையில் ராகிங் தடுப்புக் குழு அமைக்க மருத்துவக் கல்லூரி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த காலங்களில், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பில் சேரும் ஜூனியர் மாணவர்களை, சீனியர் மாணவர்கள் கிண்டல் செய்வது அவர்களுக்கு பல்வேறு நூதன தண்டனைகளை வழங்குவது, அலைக்கழிப்பது என ராகிங் கொடுமைகள் கல்லூரிகளில் அரங்கேறின.
1996-ல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர் நாவரசுவை, அதே கல்லூரியில் படித்த 2-ம் ஆண்டு மாணவர் ஜான்டேவிட் ராகிங் செய்ததோடு, அவரை துண்டு, துண்டாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் ராகிங் தடுப்புக் குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. அந்தக் குழுவில் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள், வார்டன் மற்றும் மாணவர்கள் இருந்தனர். மருத்துவக் கல்லூரிகளிலும் அதே நடைமுறை பின்பற்றப்பட்டது. ராகிங் தொடர்பான புகார்களை மாணவர்கள் பதிவு செய்ய ஏதுவாக, கல்லூரி விடுதி, வளாகத்தில் ராகிங் தடுப்புக் குழு உறுப்பினர்கள் விவரத்தையும், தொலைபேசி எண்ணையும் குறிப்பிடுவர்.
கல்லூரிகளில் புதிதாக சேரும் மாணவ, மாணவியருக்கு தனியாக இருப்பிட வசதி செய்து தருவர். தமிழக அரசு மேற்கொண்ட கடும் நடவடிக்கையால் கல்லூரிகளில் தற்போது ராகிங் கொடுமை குறைந்துள்ளது.
இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் சரத்பிரபு மர்மமான முறையில் டெல்லியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இறந்தார். இதை தொடர்ந்து, மருத்துவக் கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க ராகிங் தடுப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், அந்தக் குழுவை புதிய முறையில் அமைத்து உறுதி செய்ய வேண்டும் எனவும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் தமிழக மருத்துவக்கல்லூரி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுப்படி, தற்போது அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் புதிய முறையில் ராகிங் தடுப்புக் குழு அமைக்கப் பட்டுள்ளது.
குழுவில் காவல் அதிகாரி
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி அதிகாரி ஒருவர் கூறியதாவது: முன்பு டீன் தலைமையில் துணை முதல்வர், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கொண்ட குழு அமைக்கப்படும். தற்போது, கல்லூரி முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர், வார்டன், மாநகரக் காவல் உதவி ஆணையர், ஒரு பெற்றோர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், பத்திரிகையாளர், தொண்டு நிறுவன இயக்குநர் மற்றும் மாணவர்களை உள்ளடக்கிய புதிய ராகிங் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கல்லூரி வளாகத்தில் ராகிங் செய்தால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் நபர்களுடைய விவரம் வெளியிடப்படாது. ஆனால், மருத்துவக்கல்லூரி நிர்வாகத்துக்கு மாணவர் பெயரைக் குறிப்பிடாமல், அந்த ராகிங் சம்பவம் பற்றி தகவல் அனுப்பப்படும். இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு ராகிங் தடுப்புக்குழு விசாரித்து மீண்டும் அதுபோன்ற ராகிங் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கும். மாதம் ஒருமுறை இந்தக்குழு கூடி ராகிங்கை தடுக்க ஆலோசனை நடத்தும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT