Published : 07 Dec 2023 08:35 PM
Last Updated : 07 Dec 2023 08:35 PM
சென்னை: “மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 300 நடமாடும் மருத்துவ வாகனங்களில் அனுப்பப்பட்டத்தில் 37,751 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: “அமைச்சர் மா.சுப்பிரமணியன் (06.12.2023) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றம் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகத்தில் 300 நடமாடும் மருத்துவ வாகனங்களை மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தார். அந்த வகையில், சென்னைக்கு மட்டும் 159 மருத்துவக் குழுக்கள், திருவள்ளூர் மாவட்டத்துக்கு 51 மருத்துவக் குழுக்கள், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 60 மருத்துவக் குழுக்கள், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு 30 மருத்துவக் குழுக்கள் என்று மொத்தம் 300 மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டிந்தது.
இந்த மருத்துவக் குழுக்களின் மூலம் மொத்தம் 37,751 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 1,055 நபர்களுக்கு காய்ச்சலும், 4106 நபர்களுக்கு சுவாச தொற்றும், 154 பேருக்கு வயிற்றுப் போக்கும், 226 நபர்களுக்கு சிறு காயங்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர்த்து நிவாரணப்பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 275 சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் 172 நகர்ப்புற நலவாழ்வு மையங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது.
மேலும், 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை, 104 மற்றும் 102 அவசர எண்களையும் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதில் 939 அவசர மருத்துவ உதவிகளுக்கான அழைப்புகள் ஏற்கப்பட்டு உடனடியாக அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT