Published : 07 Dec 2023 04:46 PM
Last Updated : 07 Dec 2023 04:46 PM

“சென்னை வடிகால் திட்டத்துக்காக மத்திய உதவி ரூ.500 கோடி” - மிக்ஜாம் பாதிப்பை ஆய்வு செய்த ராஜ்நாத் சிங் தகவல்

மிக்ஜாம் புயல் பாதிப்பு - சென்னையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வான்வழி ஆய்வு

சென்னை: “அண்மைக் காலமாக சென்னையில் ஏற்படும் தொடர் வெள்ள பாதிப்புகளை கருத்தில்கொண்டு, சென்னை வடிகால் திட்டத்துக்காக, ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்கு ரூ. 561.29 கோடி மதிப்பிலான நகர்ப்புற வெள்ளத் தணிப்பு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ரூ. 500 கோடி மத்திய உதவி அடங்கும்” என்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசு அலுவலர்கள் உடனான புயல் பாதிப்பு ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ராஜ்நாத் வான்வழி ஆய்வு: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். பின்னர் அரசு அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.

அதன்பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது: "மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை பாதிப்புகளில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளால் பிரதமர் நரேந்திர மோடி வேதனை அடைந்துள்ளார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மீது தனிக்கவனம் செலுத்தி வரும் பிரதமர், தமிழகத்துக்கு தேவையான உதவிகளை செய்வதோடு, வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த விவரங்களை முதல்வர் ஸ்டாலினிடம் பேசி அறிந்துகொண்டார்.

தமிழக மக்களுக்கு உதவிட, மத்திய உள்துறை அமைச்சர் அனைத்துவிதமான உதவிகளையும் செய்திட உத்தரவிட்டுள்ளார். வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்திட, பிரதமர் மோடி என்னை அனுப்பினார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு மீட்புப் பணிகளில், இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, வானிலை மையம், என்டிஆர்எஃப் உள்ளிட்ட மத்திய அரசு சார்ந்த துறைகள் தங்களது பணியை சிறப்பாக செய்து வருகின்றன.

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை நான் ஹெலிகாப்டர் மூலம் இன்று ஆய்வு செய்தேன். அதனைத் தொடர்ந்து வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் கலந்து ஆலோசித்தேன். அதேபோல், தமிழக அரசு அதிகாரிகள் உடன் நடந்த ஆய்வுக் கூட்டத்திலும் கலந்துகொண்டேன். தமிழகத்தில் நிலவும் இந்தச் சூழலில் தமிழக அரசுடன் இணைந்து மத்திய அரசு ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டு, விரைவில் இயல்பு நிலைத் திரும்ப தேவையான நடவடிக்கைகளை செய்து வருகிறோம்.

மிக்ஜாம் புயல் பாதித்த பகுதிகள்​​​

தமிழக மக்களின் நலனில் இந்திய அரசு எப்போதும் அக்கறைக் கொண்டுள்ளது என்பதை பிரதமர் மோடியின் சார்பில் நான் உறுதி அளிக்கிறேன். அதனை உறுதி செய்திடும் வகையில், இந்த பேரிடர் மீடப்புப் பணிகளில் மத்திய அரசின் பல்வேறு துறைகள் ஈடுபட்டு வருவதை மக்களும் உணர்ந்திருக்கிறார்கள். மாநில பேரிடர் மீடப்புப் படை இரண்டாவது தவணையின் மத்திய அரசின் பங்கான ரூ.450 கோடியை விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு, இந்த நிதி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக, சென்னையில் ஏற்படும் தொடர் வெள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, சென்னை வடிகால் திட்டத்துக்காக, ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்கு ரூ.561.29 கோடி மதிப்பிலான நகர்ப்புற வெள்ளத் தணிப்பு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ரூ. 500 கோடி மத்திய உதவி அடங்கும்” என்று அவர் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் நன்றி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் கூறியது: “சென்னை நகரமும், மக்களும் இயல்பு நிலைக்கு வர தொடங்கியிருக்கிறார்கள். இந்த பெரும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுத்து வருகிறது. அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் அனைவரும் இணைந்து களப்பணி ஆற்றி வருகிறோம்.

தமிழக அரசு எடுத்திருக்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், இந்த பெருமழையிலும் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் பெருமளவில் தவிர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சாலைகள், பாலங்கள், கட்டடங்கள் ஆகிய பொது கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்வதற்கும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் ஏதுவாக, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5060 கோடியை வழங்கிடுமாறு பிரதமருக்கு ஏற்கெனவே நான் கோரிக்கை வைத்திருக்கிறேன். அதனை கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக இன்று 450 கோடி ரூபாயை அளித்தமைக்கு, பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதிப்புகள் குறித்து மத்திய அமைச்சர் மற்றும் மத்திய அரசு அலுவலர்களுக்கும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட தமிழக அரசு அலுவலர்கள் விரிவாக எடுத்து கூறியுள்ளனர். நமது கோரிக்கைகள் குறித்த கோரிக்கை மனு ஒன்றையும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கொடுத்துள்ளேன். இழப்பீடுகளை மதிப்பீடு செய்திட மத்திய அரசின் குழு ஒன்றும் தமிழகத்துக்கு வர உள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலித்து மத்திய அரசு விரைவில் வழங்கிடும் என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். நிவாரணப் பணிகளைத் தொடர்ந்து முழு வீச்சில் மேற்கொண்டு அனைத்துப் பகுதிகளையும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்” என்று முதல்வர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x