Published : 07 Dec 2023 04:52 AM
Last Updated : 07 Dec 2023 04:52 AM

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வன்கொடுமை; கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - விசிக எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் அதிகரிக்கும் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அண்மையில் வெளியான தேசிய குற்ற ஆவண காப்பக தகவலை சுட்டிக்காட்டி, விசிக பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் எம்பி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் 2022-ம் ஆண்டில் எஸ்சி மக்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள், வன்கொடுமைகளின் எண்ணிக்கை 1,761 என என்சிஆர்பிஅறிக்கை தெரிவிக்கிறது. 2020-ல் 1274 ஆகவும்; 2021-ம் ஆண்டில்1377 ஆகவும் இருந்தது. 2022-ம்ஆண்டில் 56 எஸ்சி சமூகத்தவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 168 எஸ்சி பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். அதில் 18 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் 50 பேர்; 18 வயதுக்கும் குறைவான சிறுமியர் 118 பேர்.

இந்திய அளவில் எஸ்சி மக்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 57,582 ஆக இருந்தது.இது 2020-ம் ஆண்டில் 50,291ஆகவும்; 2021-ம் ஆண்டில் 50,900ஆகவும் இருந்தது. எஸ்சி மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் எண்ணிக்கை 2022-ல் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவிலேயே எஸ்சிமக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் அதிகம் நிகழும் முதல் மூன்று மாநிலங்கள் உத்தரப்பிரதேசம் (15368) ராஜஸ்தான் (8752) மத்தியபிரதேசம் (7733) ஆகும். தமிழ்நாட்டில் எஸ்சி மக்கள் மீதான வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x