Published : 07 Dec 2023 06:13 AM
Last Updated : 07 Dec 2023 06:13 AM
சென்னை: வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களை பதுக்கினாலோ, அதிக விலைக்கு விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சகஜநிலை திரும்பும்வரை நாங்கள் ஓய்வெடுக்க மாட்டோம் என்றும் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார். மிக்ஜாம் புயல் வெள்ள சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, முதல்வரின் செயலர் நா.முருகானந்தம், டான்ஜெட்கோ தலைவர் ராஜேஷ் லக்கானி, உள்துறை செயலர் பி.அமுதா, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன், பால்வளத்துறை செயலர் மங்கத்ராம் சர்மா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீர்நிலைகளை பொறுத்தவரை கட்டுப்பாட்டில் உள்ளது. புழல் ஏரியில் இருந்து காலை முதல் 100 கன அடி மட்டுமே வெளியேற்றப்படுகிறது. அடையாறு ஆற்றில், ஆதனூர், கீழ்கட்டளை, தாம்பரம் பகுதியில் இருந்து தண்ணீர் வருகிறது. இதனால், அடையாறு ஆற்றில் நந்தம்பாக்கம் தடுப்பணை பகுதியில், 37 ஆயிரம் கனஅடி வருகிறது. இதில் 2500 கன அடி மட்டும் செம்பரம்பாக்கத்தில் இருந்து வருகிறது. அடையாறு, கூவம் முகத்துவாரங்கள் சரியாக உள்ளன. மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், செம்மஞ்சேரி பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் ஒக்கியம் மடுவு வழியாக பக்கிங்காம் கால்வாயில் சேர்கிறது. இந்த பகுதிகளில் இயந்திரங்கள் மூலமும் நீர்போக்கு சரிசெய்யப்படுகிறது.
மற்ற மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக ஷிப்ட் அடிப்படையில் 25 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அதேபோல், மின்துறை, தீயணைப்பு, காவல்துறை, நெடுஞ்சாலைத் துறையினர் என 75,000 பேர் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரண முகாம்களில் இருப்பவர்கள், வீடுகளில் இருப்பவர்களுக்கு 37 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. தண்ணீர் இருக்கும் 806 இடங்களில் இருந்து, 19,806 பேர் மீட்கப்பட்டு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் நேற்று 4 நான்கு நடைகள் பெரும்பாக்கம், மடிப்பாக்கம் மற்றும் வடசென்னை பகுதிகளில் 25,000 உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது, 234 படகுகள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இழப்பு மற்றும் சேதம் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இருப்பினும் உறுதியானவை அடிப்படையில், சென்னையில் 4 பேர் உட்பட 9 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 311 கால்நடைகள் இறந்துள்ளன. 378 குடிசைகள் முழுமையாகவும், 335 குடிசைகள், 88 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மேலும், படிப்படியாக தற்போது மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால், உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக சென்னையில் நேற்று 14 லட்சம் லிட்டர் பால் விநியோகிக்கப்பட்டது. 8 மாவட்டங்களில் இருந்து 6650 கிலோ பால் பவுடர் விநியோகிக்கப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியம் மூலம் 15 ஆயிரம் 20 லிட்டர் கேன் தயாரித்து, விநியோகிக்கப்படுகிறது. சாலைகளில் தண்ணீர் வடிந்ததும், சுத்தப்படுத்தப்பட்டு, புதிய சாலைகள் போடப்படும். பெட்ரோல் பங்குகள் இன்று முழுமையாக செயல்பாட்டுக்கு வரும். 85 சதவீதம் மொபைல் நெட்ஒர்க் சீராகியுள்ளது.
நாளைக்குள் முழுமையாக சரியாகும். போக்குவரத்து பெரும்பாலும் சீராகிவிட்டது. தென்சென்னை, வடசென்னையில் சில பகுதிகளில் தண்ணீர் வடியவில்லை. விரைவில் நிலைமை சீரடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். தேவைக்கு மேல் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைக்க வேண்டாம். வியாபாரிகள் தண்ணீர் கேன்களை அதிக விலைக்கு விற்க வேண்டாம். அத்தியாவசிய பொருட்களை பதுக்க வேண்டாம். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறோம். மாணவர்களின் சான்றிதழ்கள் தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மொத்தத்தில் நிலைமை சகஜமாகும் வரை நாங்கள் ஓய்வெடுக்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT