Published : 06 Dec 2023 07:07 PM
Last Updated : 06 Dec 2023 07:07 PM
சென்னை: மிக்ஜாம் புயல் கடந்து சென்றாலும், அதிகனமழை ஓய்ந்தபோதிலும், அதன் பாதிப்புகள் இன்னும் வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, பழைய வண்ணாரப்பேட்டை, திருவெற்றியூர் உள்ளிட்ட பகுதிகளை விட்டுச் செல்லவில்லை. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மேற்கூறியுள்ள பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் வெளியே கூட வர முடியாமல் தவிக்கின்றனர். இரண்டு நாட்கள் ஆகியும் தண்ணீர் வடியாமல் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதி முழுவதுமாக தண்ணீரால் சூழப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களை வாங்க பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர் மக்கள்.
இரண்டாவது நாளாக வேளச்சேரியில் இருக்கும் மக்களை படகுகள் மூலம் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வேளச்சேரியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. வேளச்சேரியின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் அதிகளவு தேங்கி இருப்பதால் உணவு, குடிநீர் உட்பட அடிப்படை தேவைகளுக்கு கூட மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இரண்டு நாட்களாகியும் இன்னும் தண்ணீர் வடியாததால் சிலர் வீடுகளை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு சாரை சாரையாக படை எடுத்து வருகின்றனர். இரு சக்கர வாகனங்கள், கார்களை மேம்பாலம் மேல் மக்கள் நிறுத்தி வைத்திருக்கின்றனர்.
வட சென்னையின் முக்கிய பகுதியான சூளைப் பகுதியில் தண்ணீர் தேங்கி சாக்கடை போல காட்சியளிக்கிறது. அதிகப்படியான இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தண்ணீரில் சேதமடைந்து இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுல்லாமல் நீர் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் எனவும் மக்கள் கண்ணீர் மல்க வேதனை தெரிவிக்கின்றனர். எண்ணூர், மணலி போன்ற பகுதிகளிலும் இதே பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. வீட்டில் இருக்கும் தெர்மாகோலை பயன்படுத்தி மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகர்ந்து செல்லும் காட்சிகளும் வெளியாகி உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றி வடசென்னையை காக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை வடக்கு பகுதியில் சிறு குறு நிறுவனங்கள் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு அதிகமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மழை வெள்ளம் மற்றும் அம்பத்தூர் ஏரி நிரம்பி நீர் வெளியேறி நிறுவனங்களை மூழ்கடித்துள்ளது. பல கோடி மதிப்பிலான இயந்திரங்கள் சேதடைந்துள்ளதாகவும், கழுத்தளவு நீரில் மக்கள் பயணிப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
வண்ணாரப்பேட்டையில் இதுவரை தண்ணீர் வடியவில்லை, மின் விநியோகம் வழங்கப்படவில்லை என்றும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 200 அரசு பேருந்துகளை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். பழைய வண்ணாரப்பேட்டை, பேஷன் பிரிட்ஜ் ஆகிய பகுதிகளிலும் இதே நிலை தொடர்கிறது. உணவு, குடிநீர் மற்றும் பால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூடகிடைக்கவில்லை. பால் அதிகளவு விலையில் விற்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.
சென்னை சைதாப்பேட்டையில் தண்ணீர் வடிந்த நிலையில், ஒரு சில இடங்களில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. கிண்டி எஸ்டேட் சாலை, கத்திப்பாரா சந்திப்பிலும் மழை நீர் வடிந்து வருவதாக தெரிகிறது. சைதாப்பேட்டையில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு இருக்கிறது. தள்ளுமுள்ளு ஏற்படாத வண்ணம் இருக்க ஒரு காவலரும் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கொரட்டூர் பகுதியில் பொதுமக்கள் இன்னும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முதியவர் முதல் சிறிய ஒருவரை தவிர்த்து வருகின்றனர். மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அப்புறப்படுத்துவதற்கு பணிகள் மேற்கொண்டாலும், துரிதமாக செயல்படவில்லை என்ற குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
மடிப்பாக்கத்தில் ராம் நகர், குபேரன் நகர் பகுதிகளில் முழங்கால் அளவு மழை நீர் தேங்கியிருப்பதாகவும், மீட்பு பணிகள் முழுமையாக நடைபெறவில்லை எனவும் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து கடும் சிரமத்துக்கு மத்தியிலும் வெளியூர் நோக்கி அப்பகுதி மக்கள் புறப்பட தொடங்கிவிட்டனர். தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் புகார் அளிக்க முடியாமல் மக்கள் தவித்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். அதேசமயம் ஹெலிகாப்டர் மூலம் வழங்கப்பட்ட உணவு அனைவரையும் சென்று சேரவில்லை எனவும் கூறப்படுகிறது.
தாம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். தாம்பரம் கிருஷ்ணா நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் மீட்பு குழு மீட்டு வருகிறது. தாம்பரம் சிடிஒ காலனி, ராகவேந்ரா நகர் பகுதியில் கால் முறிந்த பாட்டி ஒருவரை மீட்டு படகில் ஏரி சென்றனர்.
பிறந்த குழந்தைகளை படகில் ஏற்றி மேடான பகுதிக்கு கொண்டு சென்றனர். மேற்கு தாம்பரம் ராகவேந்திரா நகரில் கட்டியுள்ள குடியிருப்பை சுற்றி கண்ணுக்கெட்டியவரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் இன்னும் மக்கள் குடியிருக்கின்றனர். தாம்பரம் சிடிஒ காலனி, ராகவேந்திரா நகர், குட்வில் நகர், எப்.ஐ.சி நகர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் குடியிருப்பவர்கள் படகு போக்குவரத்து மூலம் வெளியேறினர். பெருங்களத்தூர் பாரதி நகர் பகுதியில் 2 நாட்களாக வெள்ளம் வடியாததால் மக்கள் கூண்டோடு குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் படகிலும் நடந்தும் வெளியேறினர்.செம்பரம்பாக்கம் மற்றும் பல்வேறு ஏரிகளிலிருந்து வெளியேறும் நீர் அடையாற்றில் கலந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. | காண்க > தண்ணீரில் மிதக்கும் தாம்பரம் | மீட்புப் பணிகள் - புகைப்படத் தொகுப்பு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT