Published : 06 Dec 2023 02:24 PM
Last Updated : 06 Dec 2023 02:24 PM
சென்னை: அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் வழியாக வெள்ள நீர் விரைவாக வடிந்து வருவதாகவும், வெள்ள பாதிப்பு பணிகளில் 75,000 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார். மேலும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 866 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. 4 சதவீத பகுதிகளுக்கு மட்டுமே இன்னும் மின் விநியோகம் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அடையாற்றில் 37,000 கன அடி... - சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2500 கனஅடி தண்ணீர் மட்டும் தற்போது திறக்கப்படுகிறது. ஆனால், அடையாறு ஆறினுடைய மற்ற பகுதிகளான ஆதனூர், கீழ்க்கட்டளை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மொத்தமாக, அடையாறு ஆற்றில் 37,000 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அந்த 37,000-ல், 2500 கனஅடி மட்டுமே செம்பரம்பாக்கம் ஏரியினுடைய பங்கு. மற்றவை பிற பகுதிகளில் இருந்து வந்துகொண்டிருப்பவை. ஆனால், படிப்படியாக அந்த தண்ணீரின் அளவும் குறைந்து கொண்டே வருகிறது.
அடையாறு ஆறிலிருந்து கடலுக்குச் செல்லும் முகத்துவாரப் பகுதி நன்றாக திறந்தநிலையில் உள்ளது. அந்தப் பகுதியில் 4 இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப முகத்துவாரப் பகுதியை திறப்பதற்கு. அதேபோல் கூவம் ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் நல்லபடியாக பாய்ந்தோடி வருகிறது. இன்று காலை தமிழக முதல்வர் அந்தப் பகுதியில் நேரடியாக ஆய்வு செய்தார்.
அதேபோல், பக்கிங்ஹாம் கால்வாயின் தண்ணீர் முட்டுக்காடு வழியாக கடலில் சென்று கலக்கும். பள்ளிக்கரனை, மடிப்பாக்கம், வேளச்சேரி, பெரும்பாக்கம், செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளின் தண்ணீர், ஒக்கியம் மதகு வழியாக பக்கிங்ஹாம் கால்வாய்க்கு சென்று வருகிறது. அந்தப் பகுதியில் தொடர்ந்து 6 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் ஜேசிபி பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வெள்ள நீரைப் பொறுத்தவரை, தண்ணீர் வேகமாக வடிந்து வருகிறது. இயற்கையான வழியிலும் இது நடக்கிறது. அதேநேரம், அரசும் இயந்திரங்களைக் கொண்டு அதிகமான தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.
மீட்புப் பணியில் 75,000 பேர் - இருந்தாலும், ஒருசில பகுதிகள் குறிப்பாக தென் சென்னையில் பெரும்பாக்கம், மடிப்பாக்கம், செம்மஞ்சேரி, பள்ளிக்கரனை, வேளச்சேரி போன்ற பகுதிகளில் தண்ணீர் இன்னும் இருக்கிறது. அதேபோல், மணப்பாக்கம், முகலிவாக்கம் பகுதிகளிலும் தற்போது தண்ணீர் இருக்கிறது. ஆனால், தற்போது அந்தப் பகுதிகளிலும் தண்ணீர் வடிந்து வருகிறது. தண்ணீர் குறைந்த இடங்களில் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தப் பணிகளுக்காக மற்ற மாவட்டங்களில் இருந்து பணியாளர்களை பணியமர்த்தி உள்ளோம்.
சென்னை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர்கள் மூலமாகவும் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தமாக, 25,000 பேர் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறைகளிலும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, இன்றைக்கு மொத்த 75,000 பேர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்துப் பகுதிகளிலும் மக்களை சென்றடைந்து இருக்கிறோம்.
866 இடங்களில் தண்ணீர் தேக்கம் - மேலும் மொத்தமுள்ள 372 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் 41,406 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர தண்ணீர் சூழ்ந்துள்ளதால், வீட்டில் தங்கியிருப்பவர்கள், வீடின்றி வெளியே வசிப்பவர்கள் என இதுவரை, 37 லட்சம் உணவு பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இன்று மட்டும் 23,000-க்கு அதிகமான உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மொத்தமாக 866 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த இடங்களில் இருந்து 19 ஆயிரத்து 86 பேர் படகு உள்ளிட்ட வாகனங்கள் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
9 பேர் உயிரிழப்பு... - NDRF,TNSDA-வைச் சேர்ந்த 36 மீட்பு குழுக்களைச் சேர்ந்த 850 பேர் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளச் சேதங்களை மதிப்பிடும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த மழை வெள்ள பாதிப்புகளில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவர் மரம் விழுந்தும், மற்ற 3 பேர் மின்சாரம் தாக்கியும் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 5 பேர் என மொத்தமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.மழை வெள்ள பாதிப்புகளில் இதுவரை 4 பேருக்கு சிறுகாயங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 311 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 378 குடிசை வீடுகள் முழுமையாகவும், 35 வீடுகள் பகுதியாகவும், 88 வீடுகள் லேசாகவும் பாதிப்படைந்துள்ளன.
மின்தடை ஏன்? - மின் விநியோகத்தைப் பொறுத்தவரை, அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரம் வழங்க தயாராக இருக்கிறது. ஆனால், சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் மின் விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கியிருக்கும்போது மின்சாரம் வழங்கினால், விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதுபோன்ற அசாம்பவிதங்களைத் தவிர்க்கவே மின்சார விநியோகம் நிறுத்தவைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சென்னை மாநகரைப் பொறுத்தவரை 4 சதவீத பகுதிகளுக்கு மட்டும் மின் விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளுக்கு மின் விநியோகம் கொடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
இதனிடையே, வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி நாளை (டிச.7 - வியாழக்கிழமை) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. முழு விவரம் > வடியாத வெள்ளத்தில் மக்கள் தவிப்பு: சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை
அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த 4 மாவட்டங்கள் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை முதல் அரையாண்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர, அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி, அரையாண்டுத் தேர்வு நடைபெறும். இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நிலைமை சீரானவுடன், அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் அளித்து தனித்தனியாக வினாத்தாள் தயாரித்து அரையாண்டுத் தேர்வு நடத்திட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவுறுத்தியதின் அடிப்படையில் இச்செய்திக் குறிப்பு வெளியிடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT