Published : 06 Dec 2023 01:45 PM
Last Updated : 06 Dec 2023 01:45 PM
கோவை: விளம்பரம் தேடாமல், வெள்ளத்தில் சிக்கி முடங்கியிருக்கும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னை நகரமே கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ரூ.4,000 கோடி பணிகளால்தான் பாதிப்பு குறைவு என மீண்டும் விளம்பரத்தில் இறங்கியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
2015-ல் 28 முதல் 34 சென்டி மீட்டர் மழை பெய்தது. தற்போது பெருங்குடியில் மிக அதிகமாக 45 சென்டி மீட்டர் பெய்துள்ளது. ஆனால், சென்னை முழுவதும் பரவலாக 20 முதல் 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டை விட பாதிப்பு அதிகம். அப்படி இருக்கையில் ரூ.4,000 கோடி பணிகளால்தான் பாதிப்பு குறைவு என கூறுவது எப்படி? கடந்த மாதம் சென்னையில் உள்ள ஆறுகளை சுத்தம் செய்யும் பொருட்டு சென்னையில் நதிகளை மொத்தமாக மாற்றும் நிறுவனம் எனப்படும் ‘சென்னை ரிவர்ஸ் டிரான்ஸ்பர்மேஷன் கம்பெனி’ என்ற புதிய நிறுவனத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. திமுக ஆட்சி வரும் போதெல்லாம் கூவம் சுத்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பும், நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்படும். ஆனால் கூவமும் சுத்தமாகவில்லை. சென்னையும் சிங்கார சென்னை ஆகவில்லை.
சிங்கார சென்னை திட்டத்துக்கு ஒதுக்கிய நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாராக உள்ளாரா முதல்வர் ஸ்டாலின்? இல்லை, இதுவரை திமுக ஆட்சியில் ஆறுகளை தூர்வாரவும், கூவத்தை சுத்தப்படுத்தவும் ஒதுக்கியுள்ள நிதிகள் குறித்து வெள்ளை அறிக்கை விட தயாரா? இவ்வாறு கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அரசியல் விளம்பரம் தேடாமல், வெள்ளத்தில் சிக்கி முடங்கியிருக்கும் மக்கள் இயல்புநிலைக்கு திரும்ப தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT