Published : 06 Dec 2023 04:50 AM
Last Updated : 06 Dec 2023 04:50 AM
அமராவதி: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை கடந்த சில நாட்களாக புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் நேற்று மாலை ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது. இதனால், ஆந்திராவில் பல ஏக்கர் விவசாய பயிர்கள் நாசம் அடைந்தன. நெல்லூர் மற்றும் திருப்பதி ஆகிய நகரங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாககடந்த 3-ம் தேதி முதல் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் சென்னையை ஒட்டியுள்ள ஆந்திர மாநில எல்லைப்பகுதி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவானது. இதற்கு மிக்ஜாம் என பெயரிப்பட்டது. இந்த மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 90 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டு ஆந்திராவை நோக்கி நகரத் தொடங்கியது. இதனால் கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை கொட்டியது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல சூழ்ந்தது. பஸ், ரயில் மற்றும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதனால் கல்வி நிறுவனங்களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மிக்ஜாம் புயல் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களை நோக்கி நகரத் தொடங்கியது. இதனால் தமிழகத்தை ஒட்டியுள்ள திருப்பதி, நெல்லூர், சித்தூர் ஆகிய மாவட்டங்கள் உட்பட கடப்பா, அனந்தபூர், பிரகாசம், ஓங்கோல், குண்டூர், பாபட்லா, கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. திருப்பதி மாவட்டம் சிட்டேடுவில் அதிகபட்சமாக 39 செ.மீ., நெல்லூர் மாவட்டம் மனுபோலுவில் 36.8 செ.மீ., திருப்பதி அல்லம்பாடு 35 செ.மீ., சில்லகூரு 33 செ.மீ., நாயுடு பேட்டையில் 28.7 செ.மீ., மசூலிப்பட்டினம் 14.9 செ.மீ., பாபட்லாவில் 21 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. இதேபோல் நெல்லூர், பிரகாசம், குண்டூர் மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களிலும் 10 செ.மீ.ஐ விட அதிக மழை பதிவானது.
ஆந்திராவின் வட கடலோர மாவட்டங்களிலும் கனமழை மிக தீவிரமாக பெய்தது. மேலும் 24 மணி நேரத்துக்கு இது தொடரும் எனவும் விசாகப்பட்டின வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் நேற்று கனமழை பெய்ததால் விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.
மிக்ஜாம் புயல் காரணமாக நெல்லூர் மாவட்டம் காவலி ரயில் நிலையத்தில் மிகப்பெரிய மரம் சரிந்தது. உடனடியாக பேரிடர் மீட்பு குழுவினர் மரத்தை வெட்டி அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். அன்னமைய்யா மாவட்டம் சிட்வேலுவில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தன.
பாபட்லாவில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தபோது நகரில் உள்ள பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடைகளின் பெயர்ப் பலகைகள் சூறாவளி காற்றால் தூக்கி வீசப்பட்டன. சுமார் 130 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாமென கேட்டுக்கொள்ளப்பட்டனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பாபட்லா நகரமே இருளில் மூழ்கியது. இப்பகுதியில் கடல் 30 மீ வரை முன்னோக்கி வந்தது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். நிலைமையை சமாளிக்க மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் களம் இறங்கி உள்ளனர். பல மின்கம்பங்கள், மரங்கள் புயலால் சாய்ந்தன.
புயல் காரணமாக நெல்லூர் மற்றும் திருப்பதி நகரங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 2 மாவட்டங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. திருப்பதியில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருவதால் எங்கு பார்த்தாலும் மழை நீரும், வெள்ளமுமாக காட்சி அளிக்கிறது. சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஆங்காங்கே பஸ்கள், லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
திருமலையில் அடைமழை: திருப்பதிக்கு சுவாமி தரிசனத்துக்கு வந்துள்ள பக்தர்கள் திருமலையில் தங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். திருமலையில் பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கோகர்பம், பாபவினாசம், குமாரதாரா, ஆகாச கங்கை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியதால், நேற்று அதிகாலை 1.30 மணியளவில் கோகர்பம் அணையில் இருந்து 2 மதகுகளிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் வெள்ள நீர் மலையில் இருந்து கீழே உள்ள திருப்பதி நகருக்கு வந்ததால் திருப்பதி வெள்ளக்காடானது.
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி 11 மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
52 முகாமில் 60 ஆயிரம் பேர்: அப்போது அவர் பேசும்போது தெரிவித்ததாவது: போர்க்கால அடிப்படையில் புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற வேண்டும். மேலும், உடனுக்குடன் மின் இணைப்பு வழங்க வேண்டும். 48 மணி நேரத்துக்குள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கிட வேண்டும். அனகாபல்லியில் மட்டும் 52 முகாம்கள் ஏற்படுத்தி, இது வரை 60 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் செய்து தர வேண்டும். விவசாயிகள் நஷ்டம் அடையாமல் இருக்க இதுவரை ஒரு லட்சம் டன் தானியங்களை அரசே வாங்கி உள்ளது. 4 லட்சம் டன் தானியங்களை பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT