Published : 05 Dec 2023 06:30 PM
Last Updated : 05 Dec 2023 06:30 PM

சென்னை வெள்ளம் | சேவையில் குறைபாடு - தொலைத்தொடர்பு துண்டிப்பால் மக்கள் பரிதவிப்பு

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்கள் | படம்: பி.வேளாங்கண்ணிராஜ்

சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத அதி கனமழையின் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பல இடங்களில் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவையில் பெரிதும் அலட்சியம் காட்டப்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.

மிக்ஜாம் புயல்: மிக்ஜாம் புயல் ஞாயிற்றுக்கிழமை மாலை வட தமிழக கரையை சுமார் 250 கி.மீ. தொலைவில் நெருங்கிய போது, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவற்றில் பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. புயல் மேலும் நெருங்கிய நிலையில் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. காலையில் காற்றின் வேகம் அதிகரித்ததுடன், மழையின் தீவிரமும் அதிகரித்து அதிகனமழையாக கொட்டியது. மீனம்பாக்கத்தில் மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது.

திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவானமழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 29 செமீ., ஆவடியில் 28செ.மீ., விமான நிலையம், ஆலந்தூர் ஆகிய இடங்களில் தலா 25 செ.மீ., மழை பதிவானது. அதிகனமழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வரலாறு காணாத மழையால் மாநகரமே வெள்ளக்காடானது. சாலைகள் எங்கும் வெள்ளநீர் தேங்கியதால் பல சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பல்வேறு இடங்களில் வெள்ளநீரின் நடுவே இயக்கப்பட்ட இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் பல பழுதாகி நின்றன. அவற்றை தள்ளிச் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். பெரும்பாலான பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்ததால், தங்கள் உடைமைகளை பாதுகாக்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

மாநகரின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. இடைவிடாத மழையால் பொதுமக்கள் யாரும் வெளியில் வரமுடியவில்லை. பல சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால், அப்பகுதிகளில் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை நேற்று கடுமையாக பாதிக்கப் பட்டது. மாநகரில் மொத்தம் 254 மரங்கள் வேரோடு சாய்ந்தன.

செல்போன் தொடர்பு பாதிப்பு: புயல் மற்றும் கனமழையின் காரணமாக எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஞாயிறு இரவு முதலே மின்சார சேவை தடை செய்யப்பட்டது. இதனால், பலரும் தங்களது செல்போன் உள்ளிட்ட தொலைதொடர்பு சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியாமல் தவித்தனர். இந்தநிலையில், செல்போன் சேவை வழங்கிவந்த அனைத்து நெட்வொர்க் சேவைகளும் கடுமையாக பாதிகப்பட்டது. இதனால், பொதுமக்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. ஆபத்தான சூழலில் இருப்பவர்கள், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தவர்கள், அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோர் என பலரும் இந்த தொலைதொடர்பு சாதன நெருக்கடிக்கு ஆளாகினர்.

குறிப்பாக, மழை இல்லாத பிறமாவட்டங்களில் வசித்து வருபவர்கள், சென்னையில் வசிக்கும் தங்களது உறவினர்களை அழைத்து நலம் விசாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இங்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தாலும்கூட, தங்களது நிலை குறித்து சென்னையில் வசிப்பவர்கள் மற்ற ஊர்களில் வசிக்கும் தங்களது உறவினர்களுக்கு தெரிவிப்பதற்கான வசதி இல்லாமல் போனது. ஒருபக்கம் மின்தடை, மற்றொரு பக்கம் வெள்ளநீர் என பாதிக்கப்பட்ட மக்களால், தங்களது உறவினர்களை அழைத்து பேசமுடியாமல் போனது நிலைமையை இன்னும் மோசமாக்கியது. 5ஜி, 4ஜி என மேம்பட்ட சேவைகளை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதுபோன்ற பேரிடர் காலத்தில் பொதுமக்கள் எவ்வித பாதிப்பும் இன்றி தொலைத்தொடர்பு சேவைகளைப் பெறுவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டினர்.

போன் பே, ஜி பே செயலிகள் பாதிப்பு: பெரும்பாலான மக்கள் தங்களது அன்றாடத் தேவைகளான பணப்பரிமாற்றத்துக்கு போன் பே, ஜி பே உள்ளிட்ட செயலிகளை செல்போன் மூலம் பயன்படுத்துவது வழக்கம். குறிப்பாக, பெட்ரோல் பங்குகள், அங்காடிகள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த செயலிகளைத்தான் பலரும் பயன்படுத்துவர். புயல் மற்றும் கனமழை காரணமாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டதால், பல ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை. இதனால், கையில் பணம் எடுக்காத முடியாத பலரும், இந்த செயலிகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்க முயன்றனர்.ஆனால், செல்போன் சேவை முற்றிலுமாக தடைபட்டதால், மக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். மேலும், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பயன்படுத்தாத நிலை ஏற்பட்டது. அதேபோல், இதுபோன்ற பேரிடர் காலத்தில், மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட முக்கியமான செலவுகளுக்குக்கூட அந்த செல்போனில் உள்ள இந்த பணபரிமாற்ற செயலிகளைப் பயன்படுத்த முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.

மெட்ரோ ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு பாதிப்பு: சென்னை முழுவதும் செல்போன் நெட்வொர்க் பிரச்சினையால் மெட்ரோ பயணத்துக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தற்காலிகமாக செயல்படவில்லை. மெட்ரோ ரயில் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் அவற்றைப் பயன்படுத்தி பயணம் செய்யலாம். சிங்கார சென்னை அட்டைகளும் தற்போது செயல்படவில்லை. மெட்ரோ ரயிலில் பயணிக்க, ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர்களில் பிளாஸ்டிக் டோக்கன் டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மின்தடையால் டவரில் பிரச்சினையா? இந்த நெட்வொர்க் சார்ந்த பிரச்சினைகளுக்கு, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான டவர்களில் ஏற்பட்ட மின்தடையே காரணம் என சிலர் கூறுகின்றனர். ஆனால், பேரிடர் காலங்களில் லட்சக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும், சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களும் மேற்கொண்டிருக்க வேண்டும் என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, இன்றையக் காலக்கட்டத்தில், அருகில் இருக்கும் ஒரு நபருக்கு தகவல் தெரிவிப்பதற்குக்கூட, செல்போன் அவசியமாகிறது. இந்த நிலையில், மிக்ஜாம் போன்ற புயல் பாதிப்பு சமயத்தில், இதில், தொலைத்தொடர்பு நிறுவனங்களும், தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று பெரும்பாலான மக்களின் கூறுகின்றனர்.

வடியாத மழை நீர்: தமிழகத்தில், குறிப்பாக 2015-ம் ஆண்டே, சென்னையில் இதுபோல வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அந்த படிப்பினைகளைக் கொண்டு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக மிக்ஜாம் புயல், கனமழை மற்றும் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், சென்னை நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. குறிப்பாக வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர், பள்ளிக்கரணை, கொளத்தூர் உள்ளிட்டப் பகுதிகள் ஒவ்வொரு மழையின்போதும் கடுமையாக பாதிப்படுகிறது. ஆனால், அரசு நிரந்தரமான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தால், அந்தப் பகுதிகளில் மழைநின்று நீண்ட நேரமாகியும் தண்ணீர் வடியவே இல்லை.

வேளச்சேரி, சோழிங்கநல்லூர், தாம்பரம், பள்ளிக்கரணை, அஸ்தினாபுரம், முடிச்சூர், வரதராஜபுரம், பெருங்களத்தூர், ஆலந்தூரில் ஒரு பகுதி, பெரம்பூர், வியாசர்பாடி, கொளத்தூர், திருவொற்றியூர், கொருக்குப்பேட்டை, மகாகவி பாரதி நகர், முத்தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், மயிலாப்பூரில் 121வது வட்டம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், உணவு, குடிநீர் கிடைக்காமலும், தொலைபேசி தொடர்பிழந்து தவித்து வருகின்றனர்.

தாழ்வான இடங்களில் குடியிருக்கும் மக்களின் வீட்டிற்குள் மழைநீரும், கழிவு நீரும் புகுந்துள்ளதால் மக்கள் மொட்டை மாடிகளிலும், மேல் தளங்களில் தங்கி கீழே வர முடியாமல் உள்ளனர். வீட்டு உபயோகப் பொருட்கள், உடமைகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம். வேன், ஆட்டோ போன்றவைகளும் நீரில் மூழ்கியுள்ளன. குடிநீர், பால், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு: ஒருசில இடங்களில் மீட்புப் பணிகள் நடந்தாலும், தண்ணீர் தேங்கியுள்ள பல இடங்களிலும், மரங்கள் முறிந்து விழுந்து கிடக்கும் பகுதிகளிலும் சீரமைப்புப் பணிகள் நடைபெறாமல் இருப்பது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. செவ்வாய்க்கிழமை மழை முற்றிலுமாக மழை நின்றபிறகும்கூட, தேங்கியுள்ள நீரை அகற்றாததால், அதிலிருந்து துர்நாற்றம் வீசதுவங்கியிருப்பதுடன், கொசுக்கள் மற்றும் விஷஜந்துகள் வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மழைநீர் தேக்கம் மற்றும் தொலைத்தொடர்பு சாதன பிரச்சினைகள் குறித்து தற்போது பலரும் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

முன்னதாக, நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில், “எனது வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காரப்பக்கத்தில் மோசமான அளவில் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நான் உதவியை நாடியுள்ளேன். மின்சாரமோ, வைஃபையோ, ஃபோன் சிக்னலோ எதுவுமே இல்லை. மொட்டை மாடியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் எனக்கு சிக்னல் கிடைக்கிறது. எனக்கும், இங்கு வசிக்கும் பலருக்கும் உதவி கிடைக்கும் என நம்புகிறோம். சென்னை முழுவதும் உள்ள மக்களின் நிலையை என்னால் உணர முடிகிறது” என பதிவிட்டிருந்தார். பின்னர் அவர், தீயணைப்புத் துறையால் மீட்கப்பட்டார். அதற்கு அவர் எக்ஸ் தளத்தில் நன்றியும் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து முடக்கம்: சென்னையின் பிரதான போக்குவரத்து சாதனமாக அரசுப்பேருந்துகள் உள்ளன. புயல் மற்றும் கனமழை காரணமாக, ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து மாநகர் மற்றும் புறநகர் பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டன. இதனால், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, நகர்ப்பகுதியில் மழை நின்றுவிட்டபிறகும்கூட, போதுமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. குறைவான எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

75 சதவீத தொலைத்தொடர்பு உள்ளது: இந்நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "சகஜ நிலைக்குத் திரும்புவதற்கு மின்விநியோகம் ரெம்ப முக்கியம். 80 சதவீத பகுதிகளில் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பை பொறுத்தவரை, 2015-ம் ஆண்டு வெள்ளத்தின்போது, இரண்டு மூன்று தினங்களுக்கு யாராலும் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. ஆனால், தற்போது 75 சதவீத தொலைத்தொடர்பு இணைப்பு வசதி உள்ளது. எங்களுடைய முதன்மையான நோக்கம், சகஜநிலை திரும்ப வேண்டும். சிரமங்கள் இருக்கிறது. முழுமையாக இல்லை என்று சொல்லவில்லை. வீட்டைச்சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது. மின்தடை என பல சிரமங்கள் இருக்கிறது. அதையெலாலம் போக்குவதற்காகத்தான் நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம்" என்று அவர் கூறினார்.

உங்கள் பகுதியில் மழைநீர் வடியத் தொடங்கிவிட்டதா? அரசின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் எவ்வாறு உள்ளன? மின்வசதி, தொலைத்தொடர்பு சேவை, தண்ணீர் தேக்கம் உங்கள் பகுதியில் எப்படி உள்ளது? முன்னெச்சரிக்கை நடவடிக்கைளில் அரசின் செயல்பாடுகள் குறித்து உங்களது கருத்துகள் என்ன என்பதை கீழே கருத்துப் பெட்டியில் பதிவிடுக.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x