Published : 05 Dec 2023 10:45 AM
Last Updated : 05 Dec 2023 10:45 AM
சென்னை: கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் சென்னையில் வெள்ளத்தின் தாக்கம் இந்த முறை பெருமளவு குறைந்திருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டு மழை, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான கட்டுப்பாட்டு அறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.05) ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: “சென்னையில் வரலாறு காணாத வகையில் பெருமழை கொட்டித் தீர்த்துள்ளது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. 2021ஆம் ஆண்டு நவம்பரில் பெருமழை பெயதது. அப்போது தேங்கிய மழைநீரை கணக்கில் கொண்டு கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டமிட்டோம். அதற்கான பல்வேறு முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டது. இதற்காக சுமார் ரூ.4000 கோடி மதிப்புள்ள வெள்ளநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டோம். அதனால்தான் கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் வெள்ளத்தின் தாக்கம் பெருமளவு குறைந்திருக்கிறது.
உதாரணமாக, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை நாம் மறந்திருக்க முடியாது. அப்போது மீனம்பாக்கத்தில் பெய்த மழை 34 செமீ. ஆனால் இப்போது மீனம்பாக்கத்தில் 36 மணி நேரத்தில் 43 செமீ மழை பெயதுள்ளது. இது மிக மிக அதிகமாகும். நாம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரணப் பணிகள் காரணமாக உயிரிழப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டது. சொல்லப் போனால், 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தில் 199 பேர் உயிரிழந்தனர். ஆனால் இன்று அதை விட அதிக மழை பெய்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 9 மாவட்டங்களில் 61 ஆயிரத்து 666 நிவாரண முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு பால், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் என்பது செம்பரம்பாக்கத்திலிருந்து திட்டமிடப்படாமல் திடீரென தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அது ஒரு செயற்கை வெள்ளம். இது இயற்கை வெள்ளம். ஆனால் இந்த அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திட்டமிடலுடன் முன்கூட்டியே திறந்துவிட்டதால் இந்த பெருமழையை சமாளித்திருக்கிறோம். நேற்று மழை நிற்பதற்கு முன்பே தமிழகத்தின் அனைத்து மாநகராட்சியிலிருந்து தூய்மைப் பணியாளர்கள் சென்னை வந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சென்னை தூய்மை பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். பல பகுதிகளில் இயல்புநிலை மீண்டும் தொடங்கியிருக்கிறது. 14 அமைச்சர்கள் களத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
ரூ.4000 கோடிக்கு பணிகள் செய்தும் சென்னை மிதக்கிறது என எதிர்கட்சி தலைவர் ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதனை நான் அரசியலாக்க விரும்பவில்லை. ஆனாலும் அந்த ரூ.4000 கோடிக்கு பணி செய்த காரணத்தினால்தான் 47 ஆண்டுகள் இல்லாத மழை பெய்தும் சென்னை தப்பித்தித்திருக்கிறது. அவர்கள் ஆட்சிகாலத்தில் இதையெல்லாம் செய்யவில்லை.
வரலாறு காணாத மழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.5000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டி மத்திய அரசுக்கு இன்று கடிதம் எழுத இருக்கிறோம். நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களும் இதைப் பேச இருக்கிறார்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT