Published : 05 Dec 2023 07:27 AM
Last Updated : 05 Dec 2023 07:27 AM
புதுடெல்லி: இந்தி பேசும் 3 மாநிலங்களில் பாஜகவின் வெற்றி 2024 மக்களவைத் தேர்தலின் அக்கட்சியின் வெற்றிக்கு அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது.
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்குமூன்றில் வெற்றி கிடைத்துள்ளது. ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் பெரும்பான்மைக்கு தேவையானதை விடஅதிக தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இதன் பின்னணியில் மோடி அலையே காரணம் என பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில், இம்மாநிலங்களில் பாஜகவின் பிரச்சாரத்தில் மத்திய அரசின் திட்டங்களே அதிகம் முன்வைக்கப்பட்டன.
இந்த 3 மாநில வெற்றியால் அவற்றின் மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும்என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கெனவே, குஜராத், உத்தரபிரதேசம் சேர்த்து 106 மக்களவைத் தொகுதிகள் பாஜகவுக்கு சாதகமாக உள்ளன. இவற்றுடன், ராஜஸ்தான் 25, மத்தியபிரதேசம் 29, சத்தீஸ்கர் 11, தெலங்கானா 2 என 84 தொகுதிகளும் பாஜகவுக்கு ஆதரவான தொகுதிகளாகவே கருதப்படுகிறது. இந்த இரண்டின் 190 தொகுதிகளில் பாஜக குறைந்தபட்சம் 160 தொகுதிகளை குறிவைக்க வேண்டி வரும்.
இதர இந்தி பேசும் மாநிலங்களான டெல்லி (7), ஹரியாணா (10), உத்தராகண்ட் (5), இமாச்சலபிரதேசம் (4), ஜார்க்கண்ட் (14), பிஹார் (40) ஆகிய மாநிலங்களின் 80 தொகுதிகளில் அதிகபட்சம் பாதி தொகுதிகள் பாஜகவுக்கு சாதகமானவையாகக் கருதப்படுகிறது. எனவே 160 மற்றும் 40 சேர்த்து மொத்தம் 200 தொகுதிகளை பாஜக கைப்பற்றினால் மத்தியில் ஆட்சி அமைக்க அக்கட்சிக்கு மேலும் 73 தொகுதிகள் மட்டுமே தேவைப்படும்.
இவற்றை இதர மாநிலங்களான மகாராஷ்டிரா (48), அசாம் (14), ஒடிசா (21), மேற்கு வங்கம் (42) மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெறுவது எளிது என்பது பலரது மனக்கணக்காக உள்ளது. எனவேதற்போதைய 3 மாநில வெற்றியால், மக்களவையின் 543 இடங்களில் ஆட்சி அமைக்கத் தேவையான273 இடங்கள் தங்களுக்கு கிடைக்கும் என்பது பாஜகவின் நம்பிக்கையாக உள்ளது.
மேலும் இந்த 3 மாநிலங்களில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி, எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியை வலுவிழக்கச் செய்துள்ளது. இதன் தாக்கமாக இண்டியா கூட்டணிக்கு இனி காங்கிரஸ் தலைமை ஏற்பது சிக்கலாகும் வாய்ப்புள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் பிற தலைவர்கள் தலைமைக்கான போட்டியில் முந்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அறிவுரையை இண்டியா கூட்டணி கேட்க வேண்டும் என்றுஅவரது கட்சியின் தேசிய செயலாளர்அபிஷேக் பானர்ஜி கூறியிருப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
முக்கிய மாநிலமான உ.பி.யில் அதன் எதிர்க்கட்சித் தலைவரான அகிலேஷ் சிங் யாதவ், காங்கிரஸுக்கு கடும் எதிர்ப்பு காட்டத்தொடங்கியுள்ளார். பிஹார், உ.பி. மற்றும் மேற்கு வங்கத்தில் முக்கியக் கட்சிகளால் காங்கிரஸுக்கு கணிசமான தொகுதிகள் மக்களவைத் தேர்தலில் ஒதுக்கப்படுவது சிரமம்.
இம்மாநிலங்களில் திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம்,ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் காங்கிரஸுக்கு சாதகமாக இல்லை. சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய மூவரும் காந்தி குடும்பத்தின் செல்வாக்கையும் இழந்து வருவது 3 மாநில தோல்வியில் தெரிகிறது.
எனவே, தாம் ஆளும் இமாச்சலபிரதேசத்துடன், கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களை மட்டுமே காங்கிரஸ் நம்பவேண்டி இருக்கும். 2024 மக்களவைத்தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த மிகச்சிறிய இடைவெளியில் இண்டியா கூட்டணி புதிய உத்திகளை கையாண்டால்தான் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற முடியும். இதற்கு இண்டியா கூட்டணி உறுப்பினர்களின் ஒற்றுமை மற்றும் தொகுதிப் பங்கீடு மிகவும் முக்கியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT