Published : 05 Dec 2023 05:51 AM
Last Updated : 05 Dec 2023 05:51 AM
சென்னை: அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சொத்து குவிப்பில் ஈடுபட்ட அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கைசென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கொடைக்கானல் தாலுகா பூலாத்தூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஏ.ஆர்.கோகுலகிருஷ்ணன் சென்னைஉயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், கொடைக்கானல் தாலுகா பூலாத்தூர் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான 1.85 ஏக்கர் நிலத்தை குன்னூர் தேயிலை வாரியத்தின் முன்னாள் செயல் இயக்குநரும், தற்போதைய தமிழ்நாடு மின் நிதிமற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநருமான ஆர்.அம்பலவாணன் தனதுபினாமிகள் மூலமாக கடந்த 2010-13 காலகட்டத்தில் வாங்கியிருந்தார்.
இதுதொடர்பாக நான் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் காரணமாக அந்த நிலம் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே மீட்கப்பட்டு மீண்டும் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன்காரணமாக என் மீது பல்வேறுபொய் வழக்குகள் போடப்பட்டுகைது செய்யப்பட்டேன். எனதுகுடும்பத்தார் துன்புறுத்தப்பட்டனர்.
இதற்கு அப்போதைய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெங்கடாச்சலம் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் உடந்தையாக செயல்பட்டனர். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பினாமிகள் மூலமாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்ட அதிகாரி அம்பலவாணன் மற்றும் ஐஏஎஸ் அதிகாரியான வெங்கடாச்சலம் ஆகியோர் மீதுநடவடிக்கை எடுக்கக்கோரி குடியரசுத் தலைவரின் முதன்மைச் செயலர், மத்திய தணிக்கைத் துறை தலைவர், மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக தலைமைச் செயலர் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பினேன்.
அதன்காரணமாக மத்திய விஜிலென்ஸ் ஆணையம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
எனவே நான் அனுப்பியுள்ள நோட்டீஸின் அடிப்படையில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 311 பிரகாரம் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யவும், என் மீது பொய் வழக்குகளை பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் முறைகேடுகளுக்கு துணைபுரிந்த வருவாய்த் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மகாவீர் சிவாஜிஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் அதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனுதாரர் எப்படி இந்த வழக்கைத் தொடர முடியும், எனகேள்வி எழுப்பினார்.
அதையடுத்து இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அதற்கு அனுமதிஅளித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT