Last Updated : 10 Jan, 2018 09:33 AM

 

Published : 10 Jan 2018 09:33 AM
Last Updated : 10 Jan 2018 09:33 AM

முதியோர், பெண்கள் பாதுகாப்பில் முன்னுரிமை அளித்ததால் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு 5-வது இடம்

முதியோருக்கு தனிக்கவனம், பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை இதுவே அகில இந்திய அளவில் அண்ணா நகர் காவல் நிலையம் 5-வது இடம் பிடிக்கக் காரணம் என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள். விருது பெற்றதற்காக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையமாக தமிழகத்தைச் சேர்ந்த 2 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. முதல் இடத்தை கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் (பி2) காவல் நிலையமும் 5-வது இடத்தை சென்னை அண்ணா நகர் (கே.4) காவல் நிலையமும் பிடித்தன. இதற்கான விருது ராஜஸ்தானில் நடந்த அகில இந்திய காவல்துறை டிஜிபி மற்றும் ஐஜிக்கள் மாநாட்டில் வழங்கப்பட்டது.

சிறந்த காவல் நிலையமாக தமிழகத்தைச் சேர்ந்த 2 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்தார். மேலும் கோவை காவல் ஆணையர் கே.பெரியய்யா, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் அவர்களின் உயர் அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால் சட்டம் - ஒழுங்கு, பொது மக்களின் புகார் மீது உடனடி நடவடிக்கை, ஆவணங்கள் பராமரிப்பு, குற்றவாளிகள் மீது குறிப்பிட்ட நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் உட்பட பல பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். புகார்தாரர்கள் மற்றும் பெண்கள் எளிமையாகவும், கண்ணியமாகவும் நடத்தப்படுவதற்கான உத்தரவாதம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றிருக்க வேண்டும்.

இதுகுறித்து டிஜிபி அலுவலக உயர் அதிகாரிகள் கூறும்போது, "அண்ணாநகர் காவல் நிலையத்தில் 1.8.2015 முதல் 31.7.2016 வரை 77 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அனைத்து வழங்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கில் 30 வழக்குகளும் குற்றப்பிரிவில் 47 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன.

140 முதியவர்கள் அண்ணா நகர் காவல் நிலைய எல்லைக்குள் வசித்து வருவதாக பதிவு செய்துள்ளனர். இவர்களின் பெரும்பாலானோர் தனிமையில் வசித்து வருகின்றனர். இவர்களின் வாரிசுகளில் பெரும்பாலானோர் வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இங்கு முதியோர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அவர்களின் செல்போன் எண், முழு முகவரி உட்பட அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு ரோந்து போலீஸார் தினமும் அவர்களை கண்காணித்து வருகின்றனர்.

ரோந்து பணிக்காக மட்டும் 7 ரோந்து வாகனம், 4 ரோந்து பைக்குகள் தினமும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கில் 31 பேர், குற்றப்பிரிவில் 19 பேர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 14 பேர் என மொத்தம் 64 போலீஸார் பணி செய்து வருகின்றனர்" என்றனர்.

காவல் ஆணையர் அலுவலக அதிகாரிகள் கூறும்போது, "பெண்கள், சிறார்கள் பாதுகாப்பிலும் அண்ணா நகர் காவல் நிலையம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதன்படி, அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 01.08.2015 முதல் 31.07.2016 வரை பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பாக 220 புகார்கள் பெறப்பட்டு அனைத்து புகார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இயற்கையை பேணும் வகையில் அண்ணா நகர் காவல் நிலைய வளாகத்தில் 10 மரக்கன்று வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. அதையொட்டியுள்ள போலீஸ் குடியிருப்பில் 28 மரக்கன்று பராமரிக்கப்பட்டு வருகிறது" என்றனர்.

கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "அண்ணா நகர் காவல் நிலையத்தில் காவல் நிலைய வரவேற்பாளர், பார்வையாளர் இருக்கைகள், குடிநீர் வசதி, சுற்றுப்புற தூய்மை, கனிவான கவனிப்பு, உடனடி நடவடிக்கை, ஆவணங்கள் பராமரிப்பு, விரைந்து செயல்படுதல், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் ஒருங்கிணைந்துள்ளன. சட்டம் ஒழுங்கு, அனைத்து மகளிர், போக்குவரத்து, போக்குவரத்து புலனாய்வு, உதவி ஆணையர், துணை ஆணையர் அலுவலகம் என அனைத்து அலுவலகமும் ஒரே இடத்தில் உள்ளன. இவைதான் விருதைப் பெற்றுத்தந்தது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x