Published : 14 Jan 2018 03:24 PM
Last Updated : 14 Jan 2018 03:24 PM
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டியைப்போல் ‘ரேக்ளா ரேஸ்’ பந்தயமும் தென் மாவட்டங்களில் களைகட்டத் தொடங்கிவிட்டது. இந்த போட்டிக்காக ஒரு ஜோடி ‘ரேக்ளா ரேஸ்’ காளைகளை ரூ.2 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை விலை கொடுத்து வாங்குகின்றனர்.
‘ரேக்ளா ரேஸ்’ என்றாலே கம்பீரமாக மாடுகள் துள்ளி ஓடி வரும் காட்சிதான் அனைவரின் கண்முன் வந்து நிற்கும். கிராமங்களில் திருவிழா காலங்களில் நடக்கும் மாட்டுவண்டி பந்தயத்தைத்தான் ‘ரேக்ளா ரேஸ்’ என்று அழைக்கின்றனர். இப்பந்தயத்தில் குறிப்பிட்ட தூரத்தை கடந்து செல்லும் ரேக்ளா ரேஸ் வண்டிகள், மீண்டும் போட்டி தொடங்கிய இடத்துக்கே வந்து எல்லைக் கோட்டை கடக்க வேண்டும். அதில், முதலிடம் பெறுவோரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.
பார்வையாளர்கள் பந்தயம் தொடங்கும் இடத்திலும், வழிநெடுகிலும் நின்று போட்டியில் பங்கேற்போரை உற்சாகப்படுத்துவார்கள்.
பல ஆண்டுகளாக இப்போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாடுகளை துன்புறுத்துவதாகக் கூறி, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது இந்த ரேக்ளா ரேஸ் பந்தயத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டோடு சேர்த்து ரேக்ளா ரேஸ் மீதான தடையும் நீக்கப்பட்டது. இதனால், இந்த ஆண்டு பழைய உற்சாகத்தோடு பந்தயத்துக்கு போட்டியாளர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக இந்த வகை பந்தயங்கள், தென் மாவட்டங்களிலும், கொங்கு மண்டலத்திலும் அதிக இடங்களில் நடைபெறுகின்றன. மதுரை அவனியாபுரம், புதுப்பட்டி, திண்டுக்கல் அய்யம்பாளையம், தூத்துக்குடி விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், திருப்பூர் உடுமலைப்பேட்டை, கோவை பொள்ளாச்சியில் நடக்கும் ‘ரேக்ளா ரேஸ்’ பந்தயங்கள் மிகவும் பிரபலமானவை.
ஜல்லிக்கட்டுக்கு அலங்காநல்லூர் எப்படி பெயர்பெற்றதோ அதேபோல அலங்காநல்லூர் அருகே உள்ள புதுப்பட்டி கிராமம் ‘ரேக்ளா ரேஸ்’ போட்டிக்கு பெயர்பெற்றது.
பொங்கல் பண்டிகை தினத்தில் இங்கு ‘ரேக்ளா ரேஸ்’ பந்தயம் நடத்தப்படும். இந்த போட்டியில் உள்ளூர் ‘ரேக்ளா ரேஸ்’ காளைகள் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்க வருவார்கள். மொத்தம் 12 கி.மீ. தூரத்தை மாட்டு வண்டிகள் கடந்து செல்ல வேண்டும்.
இப்போட்டியில் பங்கேற்க தனது காளைகளுக்கு தீவிரமாக பயிற்சி அளித்துவரும் புதுப்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
ஒரு ரேக்ளா ரேஸ் வண்டிக்கான பந்தயக் காளைகள் 2 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கப்படுகிறது. என்னுடைய ஒரு ஜோடி காளை 2 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. முன்பெல்லாம் எங்கள் ஊரில் 40 பேர் ‘ரேக்ளா ரேஸ்’ காளைகள் வைத்திருந்தனர். இப்போது விரல்விட்டு எண்ணும் அளவுக்குத்தான் காளைகளை வைத்துள்ளனர். இந்த காளைகளை மற்ற காலங்களில் உழவுக்கு பயன்படுத்துவோம். இப்போது விவசாயம் குறைந்துவிட்டதால் ரேக்ளா ரேஸ் காளைகளை வளர்ப்பதும் குறைந்துவிட்டது.
காளைகள் திடமாக இருக்க தினமும் பருத்திக்கொட்டை, கோதுமைத் தவிடு, பேரீச்சம்பழம், பீட்ரூட், முள்ளங்கி உள்ளிட்டவற்றை உணவாகக் கொடுப்போம். இந்த ‘ரேக்ளா ரேஸ்’ காளைகளை சந்தைக்கு சென்று வாங்க முடியாது. அதை வளர்ப்பவர்களிடம் நேரிடையாக கேட்டுத்தான் வாங்குவோம்.
நாட்டு மாடுகளில் இருந்து இந்த ரேக்ளா பந்தயத்துக்கென்றே தனியாக காளைகளை தயார்செய்வோம்.
கிட்டத்தட்ட ஒரு வருஷம் பயிற்சி கொடுத்தால்தான், பந்தயத்தில் ஓடும். மாட்டைப் பார்த்தாலே ஓடும் என்ற நம்பிக்கை வந்தால்தான், விலை கொடுத்து வாங்கி பயிற்சி கொடுப்போம். முதலில் உழவு ஒட்டி பழக்கிய பிறகு ரேக்ளா வண்டியில் பூட்டி கொஞ்ச தூரம் போய் வருவோம். தானாக ஓடத்தொடங்கியதும் பந்தயத்துக்கு அழைத்துப்போவோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT