Published : 04 Dec 2023 05:26 AM
Last Updated : 04 Dec 2023 05:26 AM
புதுக்கோட்டை: பாஜகவின் கூட்டணிக் கட்சியாக அமலாக்கத் துறை செயல்படுகிறது என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஊழல் தடுப்புப் பிரிவுக்கு, எந்ததுறையும் விதிவிலக்கு அல்ல. யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்படுவர் என்பதற்கு, அமலாக்கத்துறை அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவமே எடுத்துக்காட்டு. இந்த விவகாரத்தில், தமிழக அரசு துணிச்சலுடன் செயல்பட்டுள்ளது.
அமலாக்கத் துறையை வைத்தோ அல்லது வேறு யாரை வைத்தோ மிரட்டினாலும், திமுக அரசு பணியாது. அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியபோது, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை அங்கு ஏன் குவிக்க வேண்டும்?. மடியில் கனம் இருந்தால், வழியில் பயம் இருக்கத்தானே செய்யும். பாஜகவின் கூட்டணிக் கட்சியாக அமலாக்கத் துறை உள்ளது. இதைத்தான் ஏற்கெனவே தமிழக முதல்வர் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி அனுப்பிய கோப்பு, தமிழகஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அந்த கோப்பு, உரிய விளக்கங்களுடன் ஆளுநருக்கு மீண்டும் அனுப்பிவைக்கப்படும்.
என் மீது நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு நிலுவையில் இருந்ததால், என்னை ஊழல்வாதி என்று பாஜகமாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துவந்தார். அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்துவிட்டது. நாங்கள் நீதித் துறை மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். எங்களுக்கு கிடைத்திருக்கிற மிகப் பெரிய வெற்றியாகஇந்த தீர்ப்பைப் பார்க்கிறோம். இந்த வழக்கை நினைவூட்டி, விரைந்து முடிக்க உதவிய அண்ணாமலைக்கு நன்றி. இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT