Published : 04 Dec 2023 05:21 AM
Last Updated : 04 Dec 2023 05:21 AM

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடந்தபோது அமலாக்கத் துறை அலுவலகத்தில் இருந்தது திமுகவினரா? - அண்ணாமலை கேள்வி

நாகர்கோவில்: அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியபோது திமுகவினர் உடனிருந்தார்களா என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மூன்று மாநில தேர்தல் வெற்றி, மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம். பிரதமர் மோடி மீதான மக்களின் நம்பிக்கை நிரூபனமாகியுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் 400 எம்.பி.க்களுக்கு மேல் பெற்று, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவது உறுதி.

மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர், வேறு சில வழக்குகள் தொடர்பான கோப்புகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், அந்த கோப்புகள் குறித்து சிலருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.

அங்கு சென்ற 35 பேரில்ஒருவர்தான் தனது அடையாள அட்டையைக் காண்பித்துள்ளார்.

சோதனை முடிந்த பிறகு, 4 பேர் மட்டுமே கையெழுத்து போட்டுள்ளனர். எனில், மற்றவர்கள் திமுகவினரா அல்லது அமைச்சரின் ஆட்களா என்று தெரியவில்லை. இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரி அளித்த புகாரை டிஜிபி விசாரித்து, மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும்.

அமலாக்கத் துறை அலுவலகத்தில் மிக முக்கியமான கோப்புகள் உள்ளன. எனவே, அங்கு நடந்தது குறித்து டிஜிபி அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இடைத்தரகர்போல செயல்படுகிறார். இவ்வாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x