Published : 03 Jul 2014 09:38 AM
Last Updated : 03 Jul 2014 09:38 AM
மவுலிவாக்கம் கட்டிட விபத்தைத் தொடர்ந்து, சென்னை நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மற்றும் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களின் உறுதித் தன்மையை சோதனையிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் (சிஎம்டிஏ) 20 சிறப்புக் குழுக்களை உருவாக்கியுள்ளது.
சென்னை பெருநகர் பகுதியில் சென்னை மாநகராட்சி மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகள் அடங்கியுள்ளன. இப்பகுதிகளில் கட்டப்படும் 2 மாடிக்கும் உயரமான கட்டிடங்களுக்கான திட்ட அனுமதியை சிஎம்டிஏ வழங்கி வருகிறது. சிறப்புக் கட்டிடங்கள் (நான்கு மாடி வரை) மற்றும் பன்னடுக்கு மாடிகள் என 2 பிரிவாக பிரித்து திட்ட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 28-ம் தேதி மவுலிவாக்கம் பகுதியில் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டிடம் திடீரென்று இடிந்து தரைமட்டமான சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய கட்டிட விபத்தாக இது அமைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து, கட்டிடங்களை முறைப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து குரல்கள் எழுப்பப்பட்டன.
சென்னையில் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கும்போதும், கட்டி முடிக்கப்படும்போதும் மட்டும் அவற்றை கண்காணிக்கும் நடைமுறை உள்ளது. கட்டிடம் கட்டப்படும்போதே அது தரமானதாக அமைகிறதா என்பதை ஆராய வழிவகைகள் இல்லை. இதை சுட்டிக்காட்டி ‘தி இந்து’, கடந்த ஞாயிறன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதே கருத்தை பல வல்லுநர்களும் சுட்டிக் காட்டினர்.
இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவின்பேரில் சிஎம்டிஏ-வில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ‘தி இந்து’விடம் சிஎம்டிஏ வட்டாரங்கள் கூறியதாவது:
சென்னையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மற்றும் ஓராண்டுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட 700 கட்டிடங்களை (நான்கு மாடி மற்றும் அதற்கும் அதிகமானவை) கண்டறிந்துள்ளோம். அந்தக் கட்டிடங்களில் விதிமுறை மீறல்கள் உள்ளதா, கட்டுமானத்தில் குறைபாடுகள் உள்ளதா, விதிமீறல்கள் ஏதேனும் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய வழிவகைகள் உண்டா என்பது போன்ற அம்சங்களை ஆராய 20 குழுக்களை அமைத்திருக்கிறோம்.
அந்தக் குழுக்களில், நகரமைப்பு துணை வல்லுநர்கள் (டெபுடி பிளானர்ஸ்) தலைவர்களாக இருப்பர். மேலும் இரு ஊழியர்கள் இடம்பெறுவர். இந்தக் குழுக்களை, தலைமை நகரமைப்பு வல்லுநர்கள் மற்றும் உறுப்பினர்-செயலர் ஆகியோர் வழிநடத்துவர்.
தற்போது கண்டறியப்பட்டுள்ள 700 கட்டிடங்களில், 350 கட்டிடங்கள் புதிதாகக் கட்டப்பட்டு வருபவை. அதில் சில இடங்களில் கட்டுமானம் தொடங்கவில்லை. அதுபோன்ற இடங்களில் ஆரம்பத்திலேயே பிரச்சினைகளை கண்டறிந்து, அவற்றை கட்டுனர்களுக்குச் சொல்வோம். அதை சரிசெய்த பிறகே கட்டுமானம் தொடரமுடியும்.
ஏற்கெனவே கட்டி முடித்த கட்டிடங்களில் குறைபாடுகள் இருந்தால் அதை சரி செய்ய அவகாசம் வழங்கப்படும். இல்லையேல், அந்த கட்டிடங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கையை உடனடியாக தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிக்கை ஒரு மாத காலத்துக்குள் தயாரிக்கப்படும்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT