Published : 21 Jan 2018 07:19 AM
Last Updated : 21 Jan 2018 07:19 AM

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் கடை வாடகை பல மடங்கு உயர்த்தப்பட்டதா? - மாநகராட்சி அதிகரிகள் விளக்கம்

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கு பல மடங்கு வாடகை உயர்த்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக 152 வணிக வளாகங்கள் உள்ளன. அதில் மொத்தம் 6,240 கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.11 கோடியே 38 லட்சம் வருவாய் கிடைக்கிறது. இந்த கடைகளுக்கான வாடகை, சந்தை வாடகையை விட மிகவும் குறைவு என்பதால் அவற்றை வாடகைக்கு எடுப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் மாநகராட்சி கடைகளுக்கான வாடகையை மாநகராட்சி நிர்வாகம் உயர்த்தி இருப்பது வாடகைதாரர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள மாநகராட்சி கடைக்கு ரூ.3,702 என இருந்த வாடகையை ரூ.21,160 ஆக பல மடங்கு உயர்த்தி இருப்பதை எதிர்த்து லதா ரஜினிகாந்த் அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார்.

வாடகை உயர்த்தப்பட்டது தொடர்பாக தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட முத்தமிழ் நகர் மாநகராட்சி கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.முத்தையா கூறிய தாவது:

மாநகராட்சி வணிக வளாக கடை வியாபாரிகள் நலனுக்காக, வணிக வளாகத்திலிருந்து 200 மீட்டர் தூரத்துக்கு கடைகள் வைக்க அனுமதி இல்லை. ஆனால் சாலையோரங்களில் நடத்தப்படும் கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அனுமதிக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் எங்கள் கடைகளுக்கு வருவது குறைகிறது.

இதே வணிக வளாகத்தில் பல கடைகள் காலியாக உள்ளன. சாலையோரம் கடை வைத்திருப்பவர்களை அங்கீகரித்து அவர்களுக்கே இந்த கடைகளை ஒதுக்கீடு செய்யலாம். இதன்மூலம் அனைவருக்கும் வியாபாரம் நடக்கும்.

வணிக வளாகங்களை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பதில்லை. குப்பைகளை அகற்றுவதில்லை. மழைக் காலங்களில் கடைகளில் மழைநீர் ஒழுகுகிறது. இதைச் சீரமைக்காமல் வாடகையை மட்டும் உயர்த்தும் மாநகராட்சியின் நடவடிக்கை வியாபாரிகளின் நலனுக்கு எதிரானது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறிய தாவது:

கடந்த 2007-ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்ட அரசாணையில், ஒருவருக்கு மாநகராட்சி கடையை வாடகைக்கு விட்ட பின்னர், 9 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த கடைகளுக்கான வாடகை மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும். அதன் பின்னர் தற்போதைய குத்தகைதாரருக்கு மேலும் 9 ஆண்டுகளுக்கு குத்தகை கால அளவை நீட்டித்துக்கொள்ள முன்னுரிமை அளிக்கலாம். அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அச்சொத்து பொது ஏலத்தின் மூலம் குத்தகைக்கு விட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடை வாடகையில் 15 சதவீதத்தை உயர்த்தவும் அந்த அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் தற்போது வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது சந்தை வாடகையை விட குறைவாகத்தான் உள்ளது. இவ்வாறு வாடகை உயர்த்தியதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 3 கோடியே 62 லட்சம் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x