Published : 03 Dec 2023 04:40 PM
Last Updated : 03 Dec 2023 04:40 PM
சென்னை: "தன்வந்திரி கடவுள் ஓர் அழகான கற்பனை; அதனை தேசிய மருத்துவ ஆணைய லோகோவில் திணிப்பதா? இது கண்டிக்கத்தக்கது" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்தும் அமைப்பான தேசிய மருத்துவ ஆணையத்தின் இலட்சினையில் தன்வந்திரி எனப்படும் கடவுளின் உருவப்படம் திணிக்கப்பட்டிருப்பதும், இந்தியா என்ற பெயருக்கு மாற்றாக பாரத் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது முற்றிலும் தேவையற்ற செயலாகும். இது கண்டிக்கத்தக்கது. மருத்துவம் என்பது உயிர் காக்கும் தொழில் ஆகும். உயிரியலும், தொழில்நுட்பமும் தான் மருத்துவத்துக்கான அடிப்படை ஆகும். மருத்துவத்துக்கு மனிதநேயம் கூடுதல் தகுதி ஆகும். ஆனால், இவற்றில் எந்த ஒன்றுடனும் தொடர்பில்லாத தன்வந்திரி கடவுளின் படத்தை மருத்துவ ஆணையத்தின் இலட்சினையில் சேர்ப்பது எந்த வகையில் நியாயம்?
தன்வந்திரி என்பவர் பாற்கடலை தேவர்கள் கடையும் போது உருவெடுத்தவர்; அவரால் தான் ஆயுர்வேத மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டது; அவர் தான் தேவர்களுக்கு மருத்துவம் அளித்தார் என்றெல்லாம் புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது. அவை அழகான கற்பனை என்பதைக் கடந்து வேறொன்றுமில்லை. கற்பனைக் கடவுளை மருத்துவ ஆணையத்தின் இலட்சினையில் திணிப்பது மிகவும் பிற்போக்கானது. மருத்துவக் கட்டமைப்பு, மனிதவளம் இல்லாமல் மருத்துவக் கல்லூரிகள் நடத்தப்பட்டால், அதற்கான நடவடிக்கை எடுக்கும் பொறுப்பில் உள்ள மருத்துவ ஆணையம் இப்படி ஒரு செயலை செய்திருக்கக் கூடாது.
மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களை நியமிக்காமல் தன்வந்திரியின் உருவப்படத்தை வைத்து அவரே மானசீகமாக மாணவர்களுக்கு மருத்துவப் பாடம் நடத்துவார் என்று கல்லூரி நிர்வாகங்கள் தரப்பில் கூறப்பட்டால், அதை மருத்துவ ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா? மருத்துவ ஆணையத்தின் இலட்சினையில் தன்வந்திரியின் படம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே சேர்க்கப்பட்டு விட்டதாகவும், கறுப்பு - வெள்ளையில் இருந்த படத்திற்கு இப்போது வண்ணம் மட்டுமே சேர்க்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ள விளக்கம் ஏற்கத்தக்கதல்ல. தன்வந்திரி படம் எப்போது சேர்க்கப்பட்டிருந்தாலும் அது தவறு தான். அதற்கு இப்போது கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதை மதித்து இலட்சினையில் இருந்து தன்வந்திரி படம் நீக்கப்படுவது தான் முறையாகும்.
மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க நிகழ்ச்சியின் போது ஹிப்போகிரட்டிக் உறுதிமொழிக்கு மாற்றாக மகரிஷி சரகர் உறுதிமொழியை ஏற்றுக்கொள்ளலாம் என்று கடந்த ஆண்டு மருத்துவ ஆணையம் பரிந்துரைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது தன்வந்திரி படத்தை திணித்து அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மருத்துவத்துறை வளர்ந்து விட்ட நிலையில், அதை மேலும் வலுப்படுத்த மருத்துவக் கல்வி ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாறாக, புராணங்களின் அடிப்படையில் சர்ச்சைகளை திணிக்க முயலக்கூடாது. தேவையின்றி ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் இலட்சினையில் தன்வந்திரி படத்தை நீக்க வேண்டும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT