Published : 03 Dec 2023 03:48 PM
Last Updated : 03 Dec 2023 03:48 PM

மிக்ஜாம் புயல் | மின்தடை ஏற்படாத வகையில் பணிபுரிய மின்துறை தயார்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

மிக்ஜாம் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து திருவள்ளூர் துணை மின்நிலையத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர்: "எல்லாவிதத்திலும், மின்தடை ஏற்படாத வகையிலும், அப்படி ஏதேனும் புயல் காற்றின் வேகத்தின் காரணமாக மின் தடை ஏற்பட்டாலும், உடனடியாக அந்த இடத்திலே பணிபுரிய மின் வாரியத்தின் ஊழியர்கள் எல்லா நிலையிலும் தயாராக இருக்கிறார்கள்" என்று தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், துரைநல்லூர் 110 கி.வோ. துணை மின் நிலையத்தில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை தமிழக நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (டிச.3) ஆய்வு செய்தார். முழுமையாக வாசிக்க > டிச.5 காலையில் கரையைக் கடக்கும் ‘மிக்ஜாம்’ புயல் - தமிழகத்தில் எங்கெல்லாம் அதி கனமழை வாய்ப்பு?

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் படி, மழை, வெள்ள காலங்களில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துக்களை தடுத்திட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை பொறியாளர் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களை நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.பின்னர், அங்கு தயார் நிலையில் இருந்த களப்பணியாளர்களிடம் மின் சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் போது மிகுந்த கவனத்துடனும், உரிய பாதுகாப்புடனும், பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி பணியில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: "தமிழக முதல்வர் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியதைப் போல, இந்த புயலால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக மிக அதிகமான கன மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ள மாவட்டமாக திருவள்ளுர் மாவட்டம் கருதப்படுவதால், கடலோரப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மின்வாரிய துறையின் அதிகாரிகளுக்கு அரசின் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, மின் வாரிய அதிகாரிகள் எல்லா இடத்திலும் தயார் நிலையில் இருக்கின்றனர். மின் தடை ஏதும் ஏற்படாமல் உடனடியாக சூழ்நிலையை சமாளிக்க கூடிய அளவுக்கு களப்பணியாளர்களையும் தளவாடப் பொருட்களையும் நாங்கள் இப்போது சேமித்து வைத்துள்ளோம். எந்த சூழ்நிலையும் சமாளிக்கக் கூடிய வகையில் தளவாடப் பொருட்களை கொண்டு செல்வதற்காக லாரி, ஜேசிபி மற்றும் கிரேன் போன்ற வாகனங்களும் தயார் நிலையில் உள்ளது.

தமிழகம் முழுவதுமே 3,00,000-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் தயாராக உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 3,650 மின் கம்பங்கள், 450 கி.மீ. தாழ்வழுத்த மின் கம்பிகள் மற்றும் 40 மின்மாற்றிகள் தற்போது தயாராக இருக்கிறது. களப்பணியாளர்கள் பொருத்த மட்டில் 1,500 நபர்கள் தயாராக வைத்துள்ளோம். இந்த துணைமின் நிலையத்தில் ஏறத்தாழ 350 களப்பணியாளர்களை மின் சீரமைப்பு பணிகளுக்காக வைத்துள்ளோம். அதே போல, மிகை உயர் மின்னழுத்தப் பாதைகளைப் பொருத்தமட்டில் 15 கி.மீ. மின் கம்பிகள், 1,000 இன்சுலேட்டர்கள் மற்றும் மிகை உயர் மின்னழுத்தப் பணி செய்யக்கூடிய பணியாளர்களையும் இங்கே தயார்நிலையில் வைத்திருக்கிறோம்.

எல்லாவிதத்திலும், மின்தடை ஏற்படாத வகையிலும், அப்படி ஏதேனும் புயல் காற்றின் வேகத்தின் காரணமாக மின் தடை ஏற்பட்டாலும், உடனடியாக அந்த இடத்திலே பணிபுரிய மின் வாரியத்தின் ஊழியர்கள் எல்லா நிலையிலும் தயாராக இருக்கிறார்கள். முதல்வர், முக்கியமாக பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, மருத்துவமனை, தொலைத் தொடர்பு சாதனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்றவற்றிற்கு மின்சாரம் தடைப்படாமல், முன்னுரிமை அடிப்படையில் சீரான மின்விநியோகம் வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தியதின் பேரில் இன்றைக்கு இந்த துணைமின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம்", என்று அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, கும்மிடிப்பபூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ,எஸ். கோவிந்தராஜன், மேலாண்மை இயக்குநர் (மின் தொடரமைப்பு கழகம்) மா.ராமசந்திரன், இயக்குநர் (பகிர்மானம்) இரா.மணிவண்ணன், சென்னை வடக்கு மண்டல தலைமைப் பொறியாளர் சுகுமார், சென்னை வடக்கு வட்ட மேற்பார்வைப் பொறியாளர் ஏ.ஆர். மஸ்கர்னஸ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x