Published : 03 Dec 2023 01:42 PM
Last Updated : 03 Dec 2023 01:42 PM

மிக்ஜாம் புயல் | மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு 725 வீரர்கள் கொண்ட 23 குழு: தமிழக அரசு தகவல்

சென்னை: வங்கக் கடல் பகுதியில் “மிக்ஜாம்” புயல் உருவாகியுள்ள நிலையில், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 350 வீரர்கள் கொண்ட 14 குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள விரைந்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள “மிக்ஜாம்” புயல் காரணமாக கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது “மிக்ஜாம்” புயலாக வலுவடைந்து உள்ளது. இது சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 290 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது என்றும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர பிரதேச மற்றும் அதனை ஒட்டியுள்ள வட தமிழக கடலோர பகுதியினை நாளை (டிச.4) முற்பகல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும், அதன் பிறகு வடக்கு திசையில் நகர்ந்து டிச.5 அன்று முற்பகல் தெற்கு ஆந்திர பிரதேசத்தின் கடற்கரையை நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே மணிக்கு 80 முதல் 100 கி.மீ. பலத்த காற்றுடன் புயலாக கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்ககப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (டிச.3) காலை 8.30 மணி வரை 30 மாவட்டங்களில் 1.14 செ.மீ. மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 2 மழைமானி நிலையங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது. மேலும், சென்னையில் 13, திருவள்ளூரில் 6, திருநெல்வேலியில் 3, தென்காசியில் 4, செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டையில் தலா ஒன்று என 28 மழைமானி நிலையங்களில் கனமழை பதிவாகியுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிச.3, மிக கனமழை – திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள். (7 மாவட்டங்கள்) கனமழை – வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள். (9 மாவட்டங்கள்)

டிச.4, மிக கனமழை – திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள். (8 மாவட்டங்கள்) கனமழை – கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் (2 மாவட்டங்கள்)

கடலோர மாவட்டங்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை: டிச.3, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.டிச.4, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 80 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். கடலூர் மற்றும் விழுப்புரம், மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

தமிழக முதல்வரின் அறிவுரைகளின் பேரில் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அவை:

  • பாதிப்புகுள்ளாகக் கூடிய பகுதிகளில் இருந்து பொதுமக்களை முன் கூட்டியே பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
  • 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 4967 இதர நிவாரண முகாம்களும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
  • கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருகிறது.
  • பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • புயலின் காரணமாக, பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
  • புயலின் காரணமாக 118 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
  • மீனவர்களுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை வழங்கியதன் காரணமாக, கிழக்கு கரையில் இருந்த 930 படகுகள் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளன. மேலும், 57 படகுகள் கிருஷ்ணாம்பட்டினம், ஜூவாலதின் மற்றும் ராமய்யா பட்டினம் மீன்பிடி துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 403 படகுகள் மேற்கு கரையில் பாதுகாப்பாக உள்ளன.
  • தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 350 வீரர்கள் கொண்ட 14 குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள விரைந்துள்ளனர்.
  • மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன.
  • புயல், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் TNSMART செயலி மூலமாகவும், Twitter, Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • சென்னையில் 162 நிவாரண மையங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. 1 நிவாரண முகாமில் 348 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 714 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வின்போது, கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குநர், சி. அ. ராமன், ஆகிய அலுவலர்கள் உடன் இருந்தனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x