Published : 03 Dec 2023 12:21 PM
Last Updated : 03 Dec 2023 12:21 PM

சென்னையில் விட்டுவிட்டு பெய்யும் கனமழை: பலத்த காற்று வீசுவதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை

படம்: ஆர்.ரவீந்திரன்

சென்னை: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுந்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியதைத் தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மிக்ஜாம்: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது. சென்னையில் இருந்து 310 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வட தமிழகத்தை நோக்கி புயல் நகரும். வரும் 5ம் தேதி முற்பகலில் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே புயலாக கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும் நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

இடிமின்னலுடன் மழை வாய்ப்பு: இதனிடையே, மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 13 மாவடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர்,கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் தொடரும் கனமழை: மிக்ஜாம் புயலைத் தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை முதலே கனமவை விட்டுவிட்டுப் பெய்து வருகிறது. மீனம்பாக்கம், கிண்டி, வடபழனி, கோடம்பாக்கம், தி.நகர், நுங்கம்பாக்கம், எழும்பூர், அண்ணா சாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, பாரிமுனை உள்ளிட்ட சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. அவ்வப்போது குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

சென்னையின் புறநகர்ப் பகுதிகளான, ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, தாம்பரம், சோழிங்கநல்லூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. பல இடங்களில் குளிர்ந்த காற்று வீசுவதால், இதமான சூழல் நிலவி வருகிறது. புயல் உருவானதைத் தொடர்ந்து, தேவையின்றி யாரும் வெளியே வரவேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பலத்த காற்று எச்சரிக்கை: மிக்ஜாம் புயல் காரணமாக, கனமழையுடன் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களிலும், நிவாரண முகாம்களிலும் தங்கி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை குறுந்தகவல் செல்போன் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x