Published : 03 Dec 2023 04:40 AM
Last Updated : 03 Dec 2023 04:40 AM
சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும். இதனால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் ஒருசில நாட்களுக்கு தேவையான உணவு, நீர் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
புயல் நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னைக்கு தென்கிழக்கே 450 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு தென்கிழக்கே 580 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது, இன்று (டிச.3) தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். தொடர்ந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும். பின்னர் கடலோரப் பகுதிகளையொட்டி வடக்கு திசையில் நகர்ந்து, வரும் 5-ம் தேதி காலை தெற்கு ஆந்திர கடற்கரையில் நெல்லூர்-மசூலிப்பட்டினத்துக்கு இடையே புயலாக கரையை கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
கன முதல் மிக கனமழை: இதன் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
இன்று திருவள்ளூர் முதல் கடலூர் வரையுள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்திலும், நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகபட்சமாக 80 கி.மீ. வேகத்திலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்சமாக 70 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
இந்நிலையில், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் வே.ராஜாராமன், பேரிடர் மேலாண்மை இயக்குநர் சி.அ.ராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதுதொடர்பாக, வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு முப்படைகளை தயார் நிலையில் வைக்குமாறு முப்படையைச் சார்ந்த அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
மீட்புக் குழுக்கள்: தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 200 வீரர்களைக் கொண்ட 8 குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்களைக் கொண்ட 9 குழுக்கள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள விரைந்துள்ளனர். 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 4,967 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன. மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன. சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 162 நிவாரண மையங்கள் தயாராக வைக்கப்பட்டுஉள்ளன. தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 504 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முகநூல், எக்ஸ் பக்கம், TNSMART செயலி மூலம் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள் பகிரப்படும். அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
பொதுமக்கள் ஒருசில நாட்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான உணவு, நீர் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் முன்கூட்டியே நிவாரண மையங்களுக்கு செல்ல வேண்டும். காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும்.
புயல் தொடர்பான எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும். அறுந்துவிழுந்த மின்சார கம்பிகளின் மீது கவனம் வேண்டும். தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம். புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் திடீரென்று குறையும். அதனால் புயல் கடந்துவிட்டதாக எண்ண வேண்டாம். மந்த நிலைக்கு பின் மீண்டும் சூறைக்காற்று பலமாக வீசும். எனவே, இந்திய வானிலை ஆய்வு மையத்தில் இருந்து புயல் கடந்துவிட்டது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியில் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
144 ரயில்கள் ரத்து: மிக்ஜாம் புயல் காரணமாக, டிச. 3, 4, 5, 6 ஆகிய தேதிகளில் 144 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை சென்ட்ரல் - விஜயவாடாவுக்கு டிச.3, 4 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் ஜன் சதாப்தி விரைவு ரயில்(12077), விஜயவாடா- சென்னை சென்ட்ரலுக்கு டிச. 3, 4 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் விரைவு ரயில்(12078), சென்னை சென்ட்ரல் - டெல்லி ஹசரத் நிஜாமுதினுக்கு டிச. 4-ம் தேதி இயக்கப்படும் துரந்தோ விரைவு ரயில்( 12269), டில்லி ஹசரத் நிஜாமுதின் - சென்னை சென்ட்ரலுக்கு டிச. 4-ம் தேதி இயக்கப்படும் துரந்தோ விரைவு ரயில்(12270), கயா- சென்னை சென்ட்ரலுக்கு டிச. 3-ம் தேதி இயக்கப்படும் வாரந்திர விரைவு ரயில் (12389), சென்னை சென்ட்ரல் - கயாவுக்கு டிச.5-ம் தேதி இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில்(12390), சென்னை சென்ட்ரல் - ஹைதரபாத்துக்கு டிச.3, 4, 5 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் அதிவிரைவு ரயில்(12603), ஹைதராபாத் - சென்னை சென்ட்ரலுக்கு டிச.4, 5, 6 ஆகி தேதிகளில் இயக்கப்படும் அதிவிரைவு ரயில்(12604), சென்னை சென்ட்ரல்- புதுடெல்லிக்கு டிச.3, 4 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் தமிழ்நாடு விரைவு ரயில் (12621), புதுடெல்லி - சென்னை சென்ட்ரலுக்கு டிச.5, 6 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் தமிழ்நாடு விரைவு ரயில் (12622) உட்பட 144 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான கட்டணத்தை அந்தந்த ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலமாக திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். ஐஆர்சிடிசி மூலமாக பதிவு செய்தவர்களுக்கு அவர்கள் வங்கி கணக்கில் பணம் திரும்ப செலுத்தப்படும். அதேநேரம், தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை.
4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (4-ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக நாளை கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதி நாளை (4-ம் தேதி) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT