Published : 20 Jan 2018 10:14 AM
Last Updated : 20 Jan 2018 10:14 AM
இ-போஸ்ட் சேவை மூலம் கடந்த 3 ஆண்டுகளில் அஞ்சல் துறைக்கு ரூ.7 கோடி வருவாய் கிடைத்துள்ளது. குறைந்த செலவில் கிடைக்கும் இச்சேவையை பொதுமக்கள் இன்னும் அதிக அளவில் பயன்படுத்தி பயன் அடையுமாறு அஞ்சல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
டெலிகிராம் சேவைக்கு மாற்றாக அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ள இ-போஸ்ட் சேவைக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மின்னஞ்சல் (இ-மெயில்) வாயிலாக அனுப்பப்படும் செய்திகளை இந்தியா வில் உள்ள எந்த ஒரு முகவரிக்கும் தபால்காரர் மூலம் நேரடி பட்டுவாடா செய்வதே இந்த இ-போஸ்ட் சேவையின் முக்கிய நோக்கமாகும். இந்நிலையில், இந்த சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு தலைமை அஞ்சல் துறை தலைவர் எம்.சம்பத் ‘தி இந்து’விடம் கூறியதாவது: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இன்று தகவல் பரிமாற்றம் மிகவும் எளிதாகி விட்டது. எனினும், கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு இந்த வசதிகள் இன்றும் எட்டாக்கனியாகவே உள்ளன. 2013-ம் ஆண்டோடு டெலிகிராம் சேவை முடிவுக்கு வந்தது. இதை அடுத்து, பொதுமக்களின் வசதிக்காக இந்திய அஞ்சல் துறை இ-போஸ்ட் சேவையைத் தொடங்கியது.
இச்சேவையின் மூலம், வாழ்த்துகள், கடிதங்கள், படங்கள் ஆகியவற்றை ஒருவர், மற்றொருவருக்கு அனுப்ப முடியும். உதாரணமாக, ஒருவர் சென்னையில் இருந்து கன்னியாகுமரி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தனது உறவினருக்கு ஏதேனும் தகவல்களை அனுப்ப விரும்பினால், அவர் தனது வீட்டருகே உள்ள அஞ்சல் நிலையத்துக்குச் சென்று குறிப்பிட்ட உறவினரின் முகவரியை மட்டும் குறிப்பிட்டால் போதும்.
அவருக்கு அனுப்ப வேண்டிய தகவல் மின்னஞ்சல் மூலம் குறிப்பிட்ட அந்த முகவரிக்கு அருகில் உள்ள அஞ்சல் நிலையத்துக்கு அனுப்பப்படும். குறிப்பிட்ட அந்த அஞ்சல் நிலையத்தில் அந்தத் தகவலை மின்னஞ்சலில் இருந்து பிரிண்ட் எடுத்து அதை அங்குள்ள தபால்காரர் குறிப்பிட்ட முகவரிக்குச் சென்று வழங்குவார். இதன் மூலம், அனுப்பப்படும் தகவல் விரைவாக பட்டுவாடா செய்யப்படும். அத்துடன், நாம் அனுப்பும் நபருக்கு இ-மெயில் முகவரி இல்லையே என்று கவலைப்படத் தேவையில்லை.
சலுகைக் கட்டணம்
மேலும், ஏ-4 அளவு தாளில் தகவல் அனுப்புவதற்கு ஒரு பக்கத்துக்கு ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம். கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் தகவல் தெரிவிக்க இ-போஸ்ட் சேவையைப் பயன் படுத்தினால் அவர்களுக்கு ஒரு பக்கத்துக்கு ரூ.6 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அத்துடன், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரே சமயத்தில் 50 அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களுக்கு தகவல்களை அனுப்பினால், அவர்களுக்கு சலுகைக் கட்டணமாக ஒரு பக்கத்துக்கு ரூ.5 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது 2,030 அஞ்சல் நிலையங்களில் இந்த இ-சேவை உள்ளது. அதேபோல், 135 இ-போஸ்ட் கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் உள்ளனர். www.indiapost.nic.in என்ற இணையதள முகவரி மூலம் பதிவு செய்து ஆன்லைன் மூலமும் இச்சேவையைப் பயன்படுத்த முடியும். இந்த இ-போஸ்ட் சேவையின் மூலம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2017 டிசம்பர் முடிய ரூ.6.92 கோடி வருவாய் கிடைத்துள்ளது. குறைந்த செலவில் கிடைக்கும் இச்சேவையை பொதுமக்கள் இன்னும் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு சம்பத் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT