Published : 03 Dec 2023 04:14 AM
Last Updated : 03 Dec 2023 04:14 AM
ஆம்பூர்: மாட்டுத் தொழுவமாக மாறி வரும் ஆம்பூர் பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு, தினசரி நூற்றுக் கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. பேருந்து நிலையத்திலிருந்து பேரணாம்பட்டு, குடியாத்தம், மேல்பட்டி, மாதனூர், ஒடுக்கத்தூர் மற்றும் மாதனூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோல், பெங்களூரு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அனைத்து அரசுப் பேருந்துகளும் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நின்று சென்று வருகின்றன. தோல் தொழிலில் ஆம்பூர் முக்கிய பங்கு வகிப்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வர்த்தக தேவைக்காக ஆம்பூர் வருகின்றனர்.
பேருந்துகளில் பயணம் செய்யும், தொழிலாளர்கள், அரசு அலுவலகங்களுக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் என தினசரி ஆயிரக்கணக்கானோர் ஆம்பூர் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் பேருந்து நிலையத்துக்குள் வந்து, தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளுக்காக காத்திருக்கும் நிலையும் உள்ளது.
பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள் போதுமான அளவு இருக்கைகள் இல்லாததால் ஆங்காங்கே தரையில் அமர்ந்திருக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆம்பூர் நகர பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகள், பேருந்து நிலையத்தில் தஞ்சமடைகின்றன. பேருந்து நிலையத்துக்கு வரும் மாடுகள் ஆங்காங்கே நின்று கொண்டும், படுத்தும் பயணிகள் அமர்ந்திருக்கும் இடத்தை ஆக்கிரமித்துள்ளன.
பேருந்து நிலையத்துக்குள் வரும் பயணிகளை சில மாடுகள் முட்டுவதால் பயணிகள் தலைதெறிக்க ஓடுகின்றனர். முட்டும் மாடுகளால் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தையுடன் வரும் பெண்கள் அச்சத்துடனே பேருந்து நிலையத்துக்குள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பேருந்து நிலையத்தை ஒட்டி, மேம்பால சாலை அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், அக்கம், பக்கம் கூட ஒதுங்க முடியாத சூழ்நிலை பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இரவு சுமார் 8 மணி அளவில் பேருந்து நிலையத்துக்கு வரும் மாடுகள், விடிய, விடிய பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, பொழுது விடிந்த பின்னால் பேருந்து நிலை யத்தை விட்டு வெளியேறுகின்றன. இரவு முழுவதும் பேருந்து நிலையத்தில் படுத்துக் கொள்ளும் மாடுகள் அங்கேயே அசுத்தம் செய்து வருவதால் ஆம்பூர் பேருந்து நிலையம் மாட்டு தொழுவமாகவே மாறிவிட்டது.
பேருந்து நிலையத்தில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் காலையில் மாடுகளின் சானத்தை அள்ளி அந்த இடத்தை சுத்தம் செய்த பிறகே கடைகளை திறக்க வேண்டி நிலை இருப்பதாகவும், இதற்கு எப்போது தான் விடிவு பிறக்குமோ? என கேள்வி எழுப்பு கின்றனர். அதேபோல, ஆம்பூர் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளும், மாடுகளால் ஏற்படும் அசுத்தம் மற்றும் துர்நாற்றத்தால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
எனவே, ஆம்பூர் நகராட்சி நிர்வாகம் பயணிகளின் நலன் கருதி இரவு நேரங்களில், பேருந்து நிலையத்துக்குள் மாடுகள் வராதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் பகல் நேரங்களில் சாலைகளில் ஆங்காங்கே சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்க வேண்டும். கால்நடைகளை வீதியில் விடும் உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும்’’ என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஆம்பூர் நகராட்சி அலுவலக அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆம்பூரில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் முயற்சி எடுத்து வருகிறோம். பேருந்து நிலையத்தில் தஞ்சமடையும் மாடுகள் பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT