Published : 02 Dec 2023 05:08 PM
Last Updated : 02 Dec 2023 05:08 PM
திருநெல்வேலி: “வருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் இடைத்தரகர்கள் மூலம் என்னைக் கூட மிரட்டின. ஊரை விட்டுப் போகச் சொன்னார்கள். செல்போன் நம்பரை மாற்றச் சொன்னார்கள்” என்று தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் தனியார் பொறியியல் கல்லூரியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழக அரசு ஆண்டுக்கு 3 முறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி படித்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் பல ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி சிறப்பாகச் செயல்படுகின்றனர். மத்திய புலனாய்வு அமைப்புகளான வருமானவரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் மத்திய அரசின் மனநிலையைத் தெரிந்து கொண்டு பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள், தொழிலதிபர்களைக் குறிவைத்து அவர்களை முதலில் அணுகுவது, பிறகு இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டிப் பேசுவது, குறிப்பிட்ட தொகையை வாங்குவது என்று நடந்துகொள்கிறார்கள்.
என்னிடமும் கூட கடந்த 3 மாதமாக இடைத்தரகர்கள் பலர் பேசினார்கள். நான் சரியாக இருக்கிறேன், என்ன வந்தாலும் மேல இருக்கிறவர் பார்த்துக் கொள்ளுவார் என்று பதில் தெரிவித்தேன். மத்திய அரசு மூலம் உங்களிடம் பிரச்சினை செய்யச் சொல்லி இருக்கிறார்கள் என இடைத்தரகர்கள் என்னிடம் பேசினார்கள். ஊரை விட்டு எல்லாம் போகச் சொன்னார்கள், செல்போன் என்னை மாற்றச் சொன்னார்கள். இப்படி எல்லாம் எனக்கு கடந்த 3 மாத காலமாக அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் செயல்பட வேண்டும். அரசியலமைப்பு சாசனம் 91-ன் படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால், 6 வாரங்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். ஆனால், தமிழக ஆளுநர் எவ்வளவு காலம் தாழ்த்த முடியுமோ, எவ்வளவு கிடப்பில் போட முடியுமோ அதைச் செய்து கொண்டிருக்கிறார். உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஆளுநர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும். மதச்சார்பின்மை நாடு என்று அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள நிலையில் இந்தியா மதச்சார்புள்ள நாடு என்று பேசி வருகிறார்” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய விவகாரம் குறித்த கேள்விக்கு, “அண்ணாமலை அவரை குறித்து அவரே இந்த கருத்தைச் சொல்லி இருக்கிறாரா?” என்று பதில் கேள்வி எழுப்பினார்.
பிறகு “மின்வாரியத்தில் நிலக்கரி வழங்கியதில் ரூ.800 கோடி அளவுக்கு நடைபெற்ற இழப்பு தொடர்பாக அமலாக்கத் துறை விசாரிக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.25 லட்சம் கோடி அளவுக்கு 500 முதல் 1000 பெருநிறுவனங்கள் வாங்கிய கடனை மத்திய அரசு ரைட் ஆஃப் (கடன் கணக்கை நீக்கியுள்ளது) செய்துள்ளது. ஆனால், விவசாயிகள் வாங்கிய கடனை இதுவரை தள்ளுபடி செய்யவில்லை” என்று அப்பாவு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT