Published : 02 Dec 2023 10:44 AM
Last Updated : 02 Dec 2023 10:44 AM
கோவை: கோவையில் 2 நாட்கள் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் நேற்று நிறைவடைந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: உள்நாட்டு நூல் உற்பத்தியாளர்களை பாதிக்கும் விதத்தில், பஞ்சு ஏற்றுமதியின்போது உள்நாட்டு தேவையை கணக்கில்கொள்ளாமல், பன்னாட்டு நூல் இறக்குமதிக்கு கொடுத்துள்ள அனுமதியை விலக்கிக் கொள்ள வேண்டும். கழிவுப் பஞ்சை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்ய வழிவகுக்க வேண்டும். ஏற்றுமதி தொழில்கள் மந்தமாகியிருப்பதால் டிராபேக் சதவீதத்தை உயர்த்த வேண்டும். மேற்கு மாவட்டங்களில் செயல்படும் தொழில்களுக்கு வங்கிக் கடன்களில் நிவாரண திட்டம் அறிவிக்க வேண்டும்.
‘தமிழ்நாடு பருத்தி கழகம்' உருவாக்குவோம் என்ற முக்கியமான அறிவிப்பை தமிழ்நாடு அரசு மேற்கொண்டது. அதனை உடனடியாக அமலுக்கு கொண்டுவந்து நிவாரணமளிக்க வேண்டும். மத்திய அரசின் நிர்பந்தம் காரணமாக தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில்களுக்கு மின் கட்டணத்தில் செய்துள்ள மாற்றங்கள் கடும் பாதிப்பை உருவாக்கியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் எழுந்த விமர்சனங்களை தொடர்ந்து இந்த சுமை ஓரளவு குறைக்கப்பட்டிருந்தாலும், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு நிலை கட்டணம், பீக் ஹவர் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். சிறு, குறு தொழில்களை பாதுகாக்கும் வகையில் முற்றாக நிவாரணம் அளிப்பதுடன் சூரிய மின்சாரம் உள்ளிட்ட மாற்று முறைகளை கையாள அரசு மானியம் மற்றும் கடன் உதவிகள் வழங்கிட வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT