Published : 02 Dec 2023 09:58 AM
Last Updated : 02 Dec 2023 09:58 AM

அமலாக்கத் துறை அதிகாரி கைது விவகாரம் | தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ள நடவடிக்கை - தமிழக அரசு தகவல்

மதுரை அமலாக்கத் துறை அலுவலகம் (இடது) கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி (வலது)

சென்னை: அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் வேறு அமலாக்கத்துறை அலுவலர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்தும், அவருக்கு தொடர்புடைய இதர இடங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ”மத்திய அரசின் மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அலுவலராகப் (Enforcement Officer) பணி புரிந்து வரும் அங்கித் திவாரி (Ankit Tiwari) என்பவர் கடந்த 29.10.2023 அன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை தொடர்பு கொண்டு அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு முடிந்து போன வழக்கை சுட்டிக்காட்டியுள்ளார்

அவ்வழக்கில் அமலாக்க துறை விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும். 30.10.2023 அன்று மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதன்படி, அந்த அரசு ஊழியர் மதுரைக்குச் சென்றபோது அங்கித் திவாரி அரசு ஊழியரின் காரிலேயே ஏறிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி தரவேண்டும் என்றும், பின்னர் தனது உயரதிகாரிகளோடு பேசுவதாகத் தெரிவித்துவிட்டு இறுதியாக ரூ.51 லட்சம் தரவேண்டும் என்றும் பேரம் பேசி உள்ளார். கடந்த 01.11.2023 அன்று அரசு ஊழியர் முதல் தவணையாக ரூ.20 லட்சம் பணத்தை அவரிடம் வழங்கி உள்ளார்.

பின்னர், மேல் அதிகாரிகளுக்கும் பங்குதர வேண்டி உள்ளதால் பேசியபடி முழுத்தொகையான ரூ.51 லட்சத்தையும் தரவேண்டும் என்றும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் மிரட்டியுள்ளார்.

இவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அந்த அரசு ஊழியர். 30.11.2023 அன்று திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில் அங்கித் திவாரி அமலாக்கத் துறை அதிகாரி என்றும், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசு ஊழியரை மிரட்டி பணம் வசூலித்துள்ளார் என்றும் தெரிய வந்தது.

இதனால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டாவது தவணையாக நேற்று (01.12.2023) காலை 10.30 மணியளவில் ரூ.20 லட்சம் லஞ்சப்பணத்தைப் பெற்றுக் கொண்டபோது அவர் கையும், களவுமாக பிடிபட்டார்.

அதனைத் தொடர்ந்து அங்கித் திவாரியின் வீடு மற்றும் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையின்போது இவருக்கு தொடர்புயை பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் இவர் அமலாக்கத்துறையின் பெயரில் எவரேனும் மிரட்டியோ அல்லது அச்சுறுத்தியோ இதேபோன்ற யுக்தியை பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த குற்ற நிகழ்வில் பிற அமலாக்கத்துறை அலுவலர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக அங்கித் திவாரிக்கு தொடர்புடைய இதர இடங்களிலும் சோதனைகள் மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x