Published : 02 Dec 2023 05:31 AM
Last Updated : 02 Dec 2023 05:31 AM
சென்னை: சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கவே குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், முதல்வருடன் பேசி தீர்வு காணும்படி உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு அறிவுரை வழங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற கணினி அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டப்பேரவையில் 10 மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பினோம். அதை திருப்பிஅனுப்பும்போது, இன்னென்ன காரணங்கள் என்று தெரிவித்திருந்தால், அவற்றுக்கான விளக்கங்களை தந்து, மசோதாக்களை நிறைவேற்றி திருப்பி அனுப்பியிருப்போம். ஆனால், அப்போதுகாரணங்கள் தெரிவிக்காமல், தற்போது சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி திருப்பிஅனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில், அதற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கும் விதமாக, மத்திய உள்துறை அமைச்சகம் வாயிலாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தன்னிடம் உள்ள அதிகாரம் பறிபோகக் கூடாது என்ற எண்ணம் ஏன் அவருக்கு வருகிறது என்பது தெரியவில்லை. மாநில அரசுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் கூடாது என்று நினைப்பது எந்த அடிப்படையில் நியாயமானது என்பதும் புரியவில்லை.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு, முதல்வர் ஒரு குழுவை நியமிக்கும்போது, அதில் ஆளுநர் மற்றும் அரசின் பிரதிநிதிகள் மற்றும் சிண்டிகேட் பிரதிநிதியும் உள்ளார். அந்த தேடுதல் குழுதான் 3 பேரை பரிந்துரைக்கிறது. அதில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். அவரை ஆளுநர் தேர்வு செய்வதற்கு பதில், அரசு தேர்வு செய்யவேண்டும் என்பதில் என்ன தவறு இருக்கிறது.
மக்கள் உரிமை பறிக்கப்படாமல் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பியுள்ளோம். சட்டப்பேரவை செயலருக்கு பணி நீட்டிப்பு என்பது அரசின் முடிவு, விமர்சனங்களுக்கு பதிலளிக்க முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT