Published : 02 Dec 2023 06:25 AM
Last Updated : 02 Dec 2023 06:25 AM

திருவள்ளூர் குடியிருப்பு பகுதிகளில் வடியாத வெள்ளம்: ரப்பர் படகு மூலம் மக்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

பாலவாயல், குமரன் நகர் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால், ரப்பர் படகுகள் மூலம் மக்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்ட செங்குன்றம் தீயணைப்பு நிலை ய வீரர்கள்.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மழை சற்று ஓய்ந்த நிலையிலும், குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்துள்ள மழைநீர் வடியாமல் இருப்பதால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த நவ. 29-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் மழை கொட்டித் தீர்த்தது. மழை கடந்த 2 நாட்களாக சற்று ஓய்ந்துள்ளது. இருப்பினும், புழல் ஒன்றியத்துக்கு உட்பட்ட தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சி, பாலவாயல் குமரன் நகர், விவேக் அக்பர் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்த மழைநீர் வடியாமல் உள்ளது. இதனால், அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள், வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் அவதியுற்று வருகின்றனர். எனவே, செங்குன்றம் தீயணைப்பு நிலைய வீரர்கள் 2-வது நாளாக நேற்று ரப்பர் படகுகள் மூலம் அப்பகுதி மக்களை பத்திரமாக மீட்டனர்.

மேலும், பாலவாயல் பகுதியில் சோத்துப்பாக்கம் சாலை, சார்-பதிவாளர் அலுவலக சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். நல்லூர் பகுதியில், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை சூழ்ந்துள்ள மழைநீர் முழுமையாக வடியாததால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாயினர். ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், பெரியபாளையம் அடுத்த ஆரணி அருகே உள்ள புதுப்பாளையம் மற்றும் கொசவன்பேட்டை இடையே ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால், அங்கு போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால், புதுப்பாளையம், மங்களம், காரணி, எருக்குவாய், நெல்வாய், முக்கரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக ஆரணி மற்றும் பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரதான சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. திருவேற்காடு நகராட்சி, அயப்பாக்கம் ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டும், குழியுமாக இருந்த சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறியுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x