Published : 17 Jan 2018 11:57 AM
Last Updated : 17 Jan 2018 11:57 AM

அதிமுக, இரட்டை இலையை மீட்க தனிக்கட்சி உட்பட பல வாய்ப்புகளை பரிசீலிப்போம்: உதகையில் டிடிவி தினகரன் பேட்டி

அதிமுக மற்றும் இரட்டை இலையை மீட்க தனிக்கட்சி உட்பட பல வாய்ப்புகளையும் பரிசீலிப்போம் என டிடிவி தினகரன் உதகையில் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

உதகையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் தற்காலிகமாகவே வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம். தேர்தல் ஆணையத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. தேர்தல் ஆணைய தீர்ப்பு தற்காலிகமானதே. அதிமுக (அம்மா) என்ற பெயரில் நாங்கள் இயங்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்படும்,

இரட்டை இலை மற்றும் அதிமுகவை மீட்க தனிக்கட்சி உட்பட பல வாயப்புகளையும் பரிசீலித்து வருகிறோம்.

ஸ்லீப்பர் செல்கள் வெளிப்படுவார்கள்:

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கு தீர்ப்பு வந்த பின்னர் இந்த அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும். அப்போது, ஸ்லீப்பர் செல்கள் வெளிப்படுவார்கள்.

ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிகார மோகத்தில் தங்கள் சீட்டை காப்பாற்றிக்கொள்ளவே இருந்து விட்டனர். திமுகவினர் அலட்சியமாக இருந்து விட்டனர். இதனால் தான் திமுகவின் வாக்குகள் அதிமுகவுக்கு சென்றது.

அதிமுக வெற்றி பெற இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டு, காவல்துறை, தேர்தல் ஆணையம் ஆதரவாக செயல்பட்டது.

பாஜகவே காரணம்:

அதிமுகவில் நிலவும் குழப்பங்களுக்கு பாஜகவின் தலையீட்டே காரணம். அரசின் நடவடிக்கைகளில் ஆளுநர் தலையீடு, ஆட்சியாளர்களின் பதவி சுகமே காரணம்.

அம்மா இறந்த பின்னர் தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதாக கருதி நடிகர்கள் அரசியலுக்கு வருகின்றனர். அரசியலுக்கு தனித்தன்மை தேவை. மக்கள் ஓட்டு போட்டால் தான் யாருமே வெற்றி பெற முடியும்.

சட்டப்பேரவை பொதுத் தேர்தல் விரைவில் வரும். அதில், நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். அப்போது, ஊழல் செய்த அமைச்சர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x