Published : 01 Dec 2023 08:20 AM
Last Updated : 01 Dec 2023 08:20 AM
சென்னை: கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது என்றும், மழை பாதிப்புகளை சரிசெய்ய தமிழக அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி: ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டதாக மார்தட்டும் திமுக அரசின் இரண்டரை ஆண்டுகால ஆட்சி இதுவரை ஒரு புயலை கூட சந்திக்கவில்லை. ஆனால் இந்த சாதாரண மழைக்கே சென்னை வெள்ளத்தில் மூழ்கி மிதக்கிறது.
திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டுக்கு, சாதாரண மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாத மழைநீர் வடிகால் திட்டமும், அதனால் பரவும் பருவகால நோய்களுமே சாட்சி. திமுக அரசின் நடவடிக்கைகளை நம்பாமல், ஆங்காங்கே உள்ள அதிமுக தொண்டர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: உலக அளவில் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கும் சென்னை மாநகரம், ஆண்டுதோறும் மழைக்காலத்தில் தத்தளிப்பது வாடிக்கையாகிவிட்டது. ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.
ஒவ்வோர் அரசும் மழைநீர் வடிகால் பணிகள் என்று கூறி செலவிட்ட பல்லாயிரம் கோடி நிதி என்ன ஆனது? சென்னை முழுவதும் பழுதான சாலைகளும், தேங்கி நிற்கும் மழைநீரும் இத்தனை ஆண்டுக் காலமாக ஆட்சியாளர்கள் செய்ததாகக் கூறிய மழைநீர் வடிகால் பணிகளை கேள்விக்குரியதாக்கியுள்ளன.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், பெரும்பாலான பேருந்து நிலையங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இந்த மழைக்கே இந்த நிலைமை என்றால் ‘மிக்ஜாம்’ புயல் சென்னையை கடக்கும்போது நிலைமை எப்படி இருக்கும்? திமுக அரசால் மழைநீர் வடிகால் பணிகளை சரியாக மேற்கொள்ள முடியவில்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ்: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு பெய்த மழையால், மாநகரத்தின் பெரும்பான்மையான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளாக சென்னை மாநகரத்தில் 800 கி.மீ.க்கும் கூடுதலான தொலைவுக்கு மழைநீர் வடிகால்கள் புதிதாக அமைக்கப்பட்ட நிலையில், சென்னையில் மழைநீர் தேங்காது என்று பலரும் நம்பிக் கொண்டிருந்தனர்.
ஆனால், அந்த நம்பிக்கை நேற்றைய மழையில் பொய்த்துப் போயிருக்கிறது. அடுத்துவரும் நாட்களில் சென்னை மாநகரின் நிலை என்னவாகும்? என்ற அச்சமும் கவலையும் ஏற்படுகிறது.எனவே மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் மழைநீர் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க எவ்வித நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை என்பதற்கு முதல்வரின் தொகுதியான கொளத்தூரில் குளம்போல தேங்கியிருக்கும் மழைநீரே உதாரணம். சென்னையில் பெய்துவரும் தொடர் மழையில் பொதுமக்களை பாதுகாக்க நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT