Published : 11 Jan 2018 12:53 PM
Last Updated : 11 Jan 2018 12:53 PM
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி திருத்தங்கலில் செங்கோட்டையிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற பயணிகள் ரயிலை பட்டாசுத் தொழிலாளர்கள் மறித்துப் போராட்டம் நடத்தினர்.
திடீரென ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியது. உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மறியல் நடைபெற்ற இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீஸாரின் சமாதானத்தை ஏற்று மறியல் கைவிடப்பட்டது. இந்த திடீர் ரயில் மறியலால் சுமார் 15 நிமிடம் ரயில் தாமதமாகப் புறப்பட்டது.
பிரச்சினையின் பின்னணி:
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இப்பட்டாசு ஆலைகளில் நேரடியாக சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்டோரும், பட்டாசு உப தொழில்களான அச்சு, போக்குவரத்து உள்ளிட்ட தொழில்களில் 3 லட்சத்துக்கு மேற்பட்டோரும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் காற்று மற்றும் ஒலி மாசு புகார் தொடர்பாக நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகள் மற்றும் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்படும் தடைகள் காரணமாகவும் இத்தொழில் சரிவை சந்தித்து வருகிறது.
கடந்த ஆண்டு டெல்லியில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டதால் விற்பனையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அத்துடன், பட்டாசு விற்பனையின் மிகப்பெரிய சந்தையாகத் திகழும் வட இந்தியாவின் 5 மாநிலங்களில், கடந்த தீபாவளியையொட்டி பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டதாலும் சிவகாசியில் பட்டாசு தொழில் முடங்கியது.
டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தபோதும் காற்று மாசின் அளவு குறையவில்லை என்பதால், காற்று மாசு ஏற்படுவதற்கு பட்டாசு வெடிப்பது காரணம் இல்லை என்பது தெரியவந்தது.
அதையடுத்து, டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு இருந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியது.
இன்னும் பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் வடமாநிலங்களில் இருந்து சிவகாசி பட்டாசை கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டவில்லை.
இப்பிரச்சினையால், பட்டாசு தொழிலே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பட்டாசு உற்பத்திக்கு தடை கோரிய வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கவும், பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்க அனுமதித்து சிறப்பு சட்டத்திருத்தம் கொண்டுவர வலியுறுத்தியும் கடந்த டிச.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் சிவகாசியில் நடந்து வருகிறது. 850-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் அடைக்கப்பட்டுள்ளதால், 5 லட்சம் தொழிலாளர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT