Published : 01 Dec 2023 05:21 AM
Last Updated : 01 Dec 2023 05:21 AM
சென்னை: பதிவுத்துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ‘ஸ்டார் 3.0’ மென்பொருள் செயற்கை நுண்ணறிவை கூடுமானவரை பயன்படுத்தி, மனித தலையீடின்றி தானாகவே சேவைகளை அளிக்கும் வகையில் தயாரிக்கப்படும் என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற பத்திரப் பதிவுத்துறையில், நவீன தொழில்நுட்ப மேம்பாடு “ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டம் ” குறித்த தேசிய அளவிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கலந்து கொண்ட கருத்தரங்கை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
பதிவுத்துறையில் கணினிமயமாக்கல் என்கிற “ஸ்டார்” திட்டம்கடந்த 2000-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களிடம் எளிய அணுகுமுறை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு புதிய மேம்படுத்தப்பட்ட ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இதன்படி, விற்பவர், வாங்குபவர் மற்றும் சொத்து விவரத்தை உள்ளீடு செய்தால் இணையதளமே சம்பந்தப்பட்ட ஆவணத்தை உருவாக்கிதந்துவிடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆவணப்பதிவு மற்றும் திருமணப் பதிவுக்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகங்களுக்கு இணையவழி பட்டாமாற்ற விவரங்கள் அனுப்பிவைக்கும் வசதி மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்பட்ட ஒப்புகையுடன் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து வங்கிகள் மூலம்கட்டணம் செலுத்துதல், இணையவங்கி, பற்று அட்டை, கடன் அட்டை,யுபிஐ, ஆர்டிஜிஎஸ், என்இஎப்டிஆகியவற்றின் மூலம் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 1975-ம் ஆண்டு முதல் இணையவழியாக கட்டணமின்றி வில்லங்க சான்றுகள் தரவிறக்கம்செய்யும் வசதி உள்ளது. இதைபயன்படுத்தி தினசரி 70 ஆயிரம்சான்றுகள் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. இதன் மூலம் பொதுமக்கள் வில்லங்கச்சான்றுகள் மற்றும் சான்றிட்ட நகல்கள் பெறுவதற்காக அலுவலகம் செல்வது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த அரசு பொறுப்பேற்றது முதல், பத்திரப் பதிவுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் உருவாக்கி அரசு வருவாயை பெருக்குவதில் முன்னோடித்துறையாக மாற்றியுள்ளது. இந்நிலையில், புதிய வசதிகளை ஸ்டார் 2.0 மென்பொருளில் அரசு ஏற்படு்த்தியுள்ளது.
அதன்படி, உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு, கடனை திரும்பிஅளித்தற்கான ரசீது ஆவணம், குடியிருப்பு வாடகை ஒப்பந்தம் ஆகிய ஆவணங்களை ஆன்லைன்வழி பதிவு செய்ய முடியும். பத்திரப்பதிவின்போது எழுதி கொடுப்பவர் /எழுதி வாங்குபவரது விரல் ரேகைநிகழ் நேரத்தில் ஆதார் தரவுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பதால் ஆள்மாறாட்டம் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.
பத்திரப்பதிவு முடிந்ததும் மின்வாரியம், சென்னை மாநகராட்சி, குடிநீர் வழங்கல் வாரிய துறைகளில் பெயர் மாற்ற விண்ணப்பம் அளிப்பதற்கான வசதியும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு ஆவணப் பதிவில் முன்னுரிமை, அதிக ஆவணங்கள் பதிவாகும் அலுவலகங்களுக்கு தட்கல் டோக்கன் முறை ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனித்துவமான வசதிகளுடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன்கூடிய இணையவழிப் பதிவை எளிமையாக்க ஸ்டார் 3.0 புதிய மென்பொருளை உருவாக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டத்தில், செயற்கை நுண்ணறிவை கூடுமானவரை பயன்படுத்தப்படும். மனித தலையீடின்றி தானாகவே சேவைகளை அளித்தல், பொதுமக்கள் அலுவலகம் வராமல் சேவைகளை பெறுதல், தற்போதைய இணைதயளத்தை புதுப்பித்து எளிமையாக்கல், கிளவுட் தொழில் நுட்பம். கைபேசி செயலி ஆகியவை இடம்பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT