Published : 01 Dec 2023 10:00 AM
Last Updated : 01 Dec 2023 10:00 AM
மதுரை: அதிகாரத்தில் இருப்போர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் வலிமையானதாக இருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.
திருச்சியைச் சேர்ந்த மங்களம் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "லால்குடி வட்டம் புஞ்சைசங்கேந்தி கிராமத்தில் உள்ள எனது நிலத்தில் ராஜா என்பவர் சட்டவிரோதமாக கிராவல் மண் எடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. திருச்சி ஆட்சியர் தாக்கல் செய்த பதில் மனுவில், "புஞ்சைசங்கேந்தி கிராமத்தில் 6 ஆண்டுகள் கிராவல் குவாரி நடத்த ராஜா என்பவருக்கு உரிமம் வழங்கப்பட்டது. ஆனால், அவர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கிராவல் மண்எடுத்துள்ளார். மேலும், அருகில்உள்ள மங்களம் என்பவருக்குச் சொந்தமான நிலத்திலும் சட்டவிரோதமாக மண் எடுத்துள்ளார். இதையடுத்து குவாரிக்குத் தடைவிதிக்கப்பட்டது. மேலும், ராஜாவுக்கு அபராதம் விதிக்கவும், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோட்டாட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
மனுதாரருக்குச் சொந்தமான நிலத்தில் ராஜா சட்டவிரோதமாக குவாரி நடத்தியுள்ளார். மேலும், போலி இறப்புச் சான்றிதழ், போலி வாரிசுச் சான்றிதழ், மனுதாரரின் நிலத்துக்கு போலி பவர்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் குற்றவியல் பிரிவு மட்டுமின்றி, கனிமவள சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து, விசாரிக்க வேண்டும்.
அவர் அதிகாரிகள் துணையின்றி குவாரி நடத்தியிருக்க முடியாது. ஆனால், அதிகாரிகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்யவில்லை. இது ராஜாவின் செல்வாக்கைக் காட்டுகிறது.
சாதாரண மக்கள் மீது மட்டுமின்றி, அதிகாரத்தில் உள்ளவர்கள், செல்வாக்கு மிக்கவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் வலிமையானதாக இருக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த சட்டம் இருந்தும் பயனில்லை.
ராஜா நடத்திய சட்டவிரோத குவாரி விவகாரத்தில், திருச்சி ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். அடுத்த விசாரணையின்போது, போலீஸார் விசாரணை அறிக்கையையும், ராஜா பதில் மனுவும் தாக்கல் செய்ய வேண்டும். வரும் 11-ம்தேதிக்கு விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT