Last Updated : 01 Dec, 2023 04:12 AM

 

Published : 01 Dec 2023 04:12 AM
Last Updated : 01 Dec 2023 04:12 AM

மதுரை மாநகர பகுதியில் 5 மாதங்களில் மது அருந்தி வாகனங்களை இயக்கியவர்களுக்கு ரூ.1.17 கோடி அபராதம்

மதுரை: மதுரை மாநகரப் பகுதியில் கடந்த 5 மாதங்களில் மட்டும் மது அருந்தி வாகனம் ஓட்டியவர்களிடமிருந்து ரூ.1.17 கோடியும், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் இயக்கியவர்களிடமிருந்து ரூ.2.40 கோடியும் காவல் துறையினர் அபராதம் வசூலித்திருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

மதுரை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் எண் ணிக்கை மற்றும் அதன் மூலம் போலீஸார் வசூலித்த அபராதத் தொகை குறித்து, கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரைக்கான ( 5 மாதங்கள் ) தகவல்களை, மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.

இவரது கேள்விகளுக்கு மாநகர காவல் துறை குற்றப் பதிவேடு பிரிவு மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2023 ஜூன் முதல் அக்டோபர் வரை மாநகர காவல் துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தலைக்கவசமின்றி இரு சக்கர வாகனங்கள் ஓட்டியது தொடர்பாக 1,25,586 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.2,39,83,000 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

மதுபானம் அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டியது குறித்து பதிவு செய்த 3,719 வழக்குகள் மூலம் ரூ.1,17,75,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகர எல்லையில் சீட் பெல்ட் அணியாமல் கார் இயக்கியது தொடர்பாக 5 மாதத்தில் மட்டும் 2,597 வழக்குகள் பதியப்பட்டு, அதன் மூலம் ரூ.11,29,500 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

தலைக்கவசம் அணியாமலும், மது அருந்தியும், சீட் பெல்ட அணியாமலும் வாகனங்களை இயக்கிய நபர்களிடம் இருந்து வசூலிக்கப்படாத நிலுவையிலுள்ள அபராதத் தொகை குறித்து தகவல் கேட்கப்பட்டது. அதற்கு, மதுபோதையில் வாகனம் ஓட்டியர்கள் மீது நீதிமன்றம் மூலம் அபராதம் விதிக்கப்படுவதால், நிலுவைத் தொகையை சரியாக குறிப்பிட இயலவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x