Published : 30 Nov 2023 08:58 PM
Last Updated : 30 Nov 2023 08:58 PM

மதுரை - சொக்கலிங்கபுரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு: புகாரளித்த விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மறுப்பு

சொக்கலிங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

மதுரை: மதுரை கொட்டாம்பட்டி அருகே சொக்கலிங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் பல லட்சம் முறைகேடு செய்ததாக புகார் தெரிவித்த விவசாயிகளுக்கு தற்போது பயிர்க்கடன் வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை கூட்டுறவுத் துறை துணைப்பதிவாளர் ஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொட்டாம்பட்டி அருகே சொக்கலிங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2015-ல் ஜனவரி முதல் டிசம்பர் வரையில் போலி ஆவணங்கள் மூலம் 100-க்கும் மேற்பட்டோருக்கு பயிர்க்கடன் வழங்கியதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக சங்க உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக கொட்டாம்பட்டி போலீஸார், முன்னாள் சங்கத் தலைவர், செயலாளர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், புகார் அளித்த உதினிப்பட்டி பகுதி விவசாயிகளுக்கு தற்போது பயிர்க்கடன் வழங்காமல் அலைக்கழிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து சங்க உறுப்பினரும், உதினிப்பட்டி விவசாயி ந.அருணாச்சலம் கூறியதாவது: "சொக்கலிங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அரசு வெளியிட்ட 2015-ல் பயிர்க்கடன் பெற்று தள்ளுபடியான விவசாயிகள் பட்டியலை 2016-ல் வெளியிட்டபின் முறைகேடு நடந்தது தெரிந்தது. ஒரே சர்வே எண், பட்டா எண்ணில் பலரது பெயரிலும், போலி ஆவணங்கள் மூலம் கடன் வாங்கியவருக்கு தெரியாமலே கூடுதலாக கடன் பெற்றது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் வெளிவந்தது.

சொக்கலிங்கபுரத்தில் துணைப்பதிவாளர் காயத்ரி ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக முன்னாள் தலைவர், செயலாளர் மற்றும் உடந்தையாக இருந்த வருவாய்த் துறையினர் மீது வழக்குப்பதிந்து கொட்டாம்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர். கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடரிடமும் புகார் தெரிவித்துள்ளோம். கூட்டுறவு சார்பதிவாளர் தலைமையில் விசாரித்தும் நடவடிக்கை இல்லை. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், முறைகேடு பணங்களை வசூலிப்பதற்கு பதிலாக புகார் அளித்தவர்களை சமரசப்படுத்தும் வேலையில் ஈடுபடுகின்றனர். எனவே, தற்போது புகார் அளித்தவர்களுக்கு பயிர்க்கடன் வழங்க மறுக்கின்றனர். இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளோம்", என்றார்.

இதற்கிடையில் துணைப்பதிவாளர் காயத்ரி இன்று சங்கத்தில் ஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கூட்டுறவுத் துறை துணைப்பதிவாளர் காயத்ரி கூறுகையில், "சொக்கலிங்கபுரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் வழக்கமான ஆய்வுதான்" என்றார்.

புகார்கள் தொடர்பாக விசாரித்துவரும் கூட்டுறவு சார்பதிவாளர் பரமசிவம் கூறுகையில், "விசாரித்ததில் சங்கத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. செயலாளரின் உறவினர்களுக்கு உரிய ஆவணங்களின்படி முறையாக கடன் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகள் பொய் சொல்கின்றனர். தற்போது அனைவருக்கும் பயிர்க்கடன்கள் வழங்கப்படுகின்றன", என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x