Published : 30 Nov 2023 05:33 PM
Last Updated : 30 Nov 2023 05:33 PM
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சடையனேரி கால்வாயை கிராம மக்கள் நிதி திரட்டி சீரமைத்தனர். சாத்தான்குளம் ஒன்றியத்தில் 10-க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக வைரவம் தருவை, புத்தன் தருவை ஆகிய குளங்கள் விளங்கி வருகின்றன. இந்த குளங்களில் நீர் இருப்பு இருந்தால் இப்பகுதியில் குடிநீர் மற்றும் விவசாய தேவைகள் பூர்த்தியாகும் நிலை உள்ளது. இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக போதிய மழை இல்லாததால் இந்த குளங்களுக்கு நீர் வரத்தும் குறைந்து போனது.
இதனால் சடையனேரி கால்வாயில் வரும் தண்ணீரையே கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ளனர். இப்பகுதி மக்கள், விவசாயிகள் பயனடையும் வகையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனவே, விரைவில் சடையனேரி கால்வாயில் விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் உள்ள சடையனேரி கால்வாயை தாங்களே தூர்வாரி சீரமைத்து வருகின்றனர். சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச்சங்க நிர்வாகிகள், நங்கைமொழி பகுதியில் இருந்து புத்தன்தருவை பகுதிக்கு திரும்பும் சடையனேரி கால்வாய் நீர்வழிபாதையை கடந்த வாரம் சீரமைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி பொத்தகாலன் விளை பகுதியில் வரும் சடையனேரி கால்வாயை, கிராம மக்களிடம் நிதி திரட்டி சீரமைக்க சாஸ்தாவிநல்லூர் தொடகக கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் லூர்துமணி தலைமையில் ஊர் நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி கிராம மக்கள் அவர்களுக்கு இயன்ற நிதியை அளித்தனர்.
இதனை தொடர்ந்து கிராம மக்கள் பங்கேற்புடன் கால்வாயை தூர்வாரி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பொத்தகாலன்விளை பகுதியில் தூர்ந்த நிலையில் காணப்பட்ட கால்வாயில் இருந்த செடி, கொடிகள், முட்செடிகள் மற்றும் குப்பைகளை கிராம மக்கள் இணைந்து அகற்றினர். மேலும், பொக்கலைன் இயந்திரம் மூலம் தூர்ந்த பகுதிகளை தூர்வாரி சீரமைத்தனர். வைரவம் தருவை குளத்துக்கு செல்லும் பகுதியில் இருந்து முதலூர் புதூர் வரை சுமார் 4 கி.மீ., தொலைவுக்கு கால்வாய் சீரமைக்கப்பட்டது. இதன் மூலம் சடையனேரி கால்வாயில் தண்ணீர் வந்தால் வைரவம் தருவை குளத்துக்கு தண்ணீர் தடங்கலின்றி விரைவாக சென்று நிரம்பும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்த சீரமைப்பு பணியில், இதன் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவருமான லூர்துமணி தலைமையில் சாஸ்தாவி நல்லூர் விவசாயிகள் நலச்சங்க தலைவர் எட்வின் காமராஜ், வேதக்கண் அறக்கட்டளை நிறுவனர் ஜோசப் சேவியர், சங்க பொருளாளர் ரூபேஷ் குமார், பெண்கள் ஒருங்கிணைப்பாளர் ரூபி, சங்க செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர்மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கிராம மக்கள் பங்களிப்புடன் கால்வாயை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT