Published : 30 Nov 2023 03:29 PM
Last Updated : 30 Nov 2023 03:29 PM

4,967 நிவாரண முகாம்கள், 17 மீட்புப் படை குழுக்கள்... - புயல், கனமழையை எதிர்கொள்ள தயாராகும் தமிழகம்!

சென்னை: கனமழையால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், சாலைகள், சுரங்கப் பாதைகள் இவற்றில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்றிட தேவையான மின் மோட்டார்கள் அமைத்திடவும், மழைநீர் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கிடவும், அப்பகுதியின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (நவ.30) சென்னை மாநகரில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், வங்கக் கடலில் உருவாகவுள்ள புயல் காரணமாக மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்ட்டத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வடகிழக்கு பருவமழை 21.10.2023 அன்று தொடங்கியதிலிருந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கனமழையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் ஆய்வு: தமிழக முதல்வர மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, ரிப்பன் மாளிகை, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துக்கு நேரில் சென்று, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, மழைநீர் வெள்ள பாதிப்பு தொடர்பாக கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்ட பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் உரையாடி அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், ரிப்பன் மாளிகையில் தயார் நிலையில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினரை முதல்வர் சந்தித்து, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, மீட்பு உபகரணங்களையும் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திட வேண்டும் என்றும்,மின்தடை ஏற்படக்கூடிய இடங்களில் உடனடியாக மக்களுக்கு எந்தவித இடையூறிமின்றி மின்விநியோகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளவும், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.

மேலும், தற்போது பெய்துவரும் கனமழையால் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்றிவுடம், புதிதாக புயல் உருவாகவுள்ளதையொட்டி அதன்பொருட்டு பெய்யும் கனமழையால் அடுத்து வரும் சில நாட்களில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், சாலைகள், சுரங்கப் பாதைகள் இவற்றில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்றிட தேவையான மின் மோட்டார்கள் அமைத்திடவும், மழைநீர் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கிடவும், அப்பகுதியின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டுமென்று முதல்வர் உத்தரவிட்டார்.

மேலும், கடந்த இரு தினங்களில் மழைநீர் தேங்கிய இடங்களை குறிப்பாக கண்காணித்து, அங்குள்ள நீரை அகற்றிடவும், மீண்டும் அப்பகுதியில் மழைநீர் தேங்காவண்ணம் உயர்சக்தி மின் மோட்டார்களை வைத்து நீரினை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு பகுதி மக்களிடம் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தினார். அவர்களுக்கு தேவையான உணவு, பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைத்திடவும் அறிவுறுத்தினார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கனமழை பெய்யவுள்ள மாவட்டங்கள்: நவ.27 அன்று உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளது. பின்னர், இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணிநேரத்துக்குள் மேலும் வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் டிச.2 அன்று புயல் சின்னமாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • நவ.30 கனமழை – செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள். (10 மாவட்டங்கள்)
  • டிச.1 கனமழை –கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை (6 மாவட்டங்கள்)
  • டிச.2 மிக கனமழை - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள். (5 மாவட்டங்கள்) கனமழை - ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்கள். (8 மாவட்டங்கள்)
  • டிச.3 மிக கனமழை - திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள். (5 மாவட்டங்கள்) கனமழை - ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள். (8 மாவட்டங்கள்)
  • டிச.4 கனமழை - சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள். (5 மாவட்டங்கள்)

தமிழக முதல்வரின் அறிவுரைகளின் பேரில் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கு 29.11.2023 அன்று, நீர்த்தேக்கங்களில் நீர் மேலாண்மை செய்வது, 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை தகவல்கள் வழங்குவது, பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளில் இருந்து பொதுமக்களை முன் கூட்டியே பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் மற்றும் இதர நிவாரண மையங்களை அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைத்திருப்பது ஆகிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
  • ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள, மீன் பிடிப்படகுகள் 29.11.2023-க்குள் கரைக்குத் திரும்புமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு கரையில் இருந்த அனைத்து படகுகளும் பாதுகாப்பாக கரைக்கு திரும்பியுள்ளன.
  • இதுமட்டுமின்றி, மேற்குக் கரையில், 477 படகுகள் பாதுகாப்பாக உள்ளன. மேலும், கரையில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்கும் திரும்புமாறும், கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்களுக்கு எச்சரிக்கையும், பொது மக்களுக்கு புயல் குறித்த எச்சரிக்கையும் கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.
  • மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு முப்படையினை தயார் நிலையில் வைத்திட முப்படையினைச் சார்ந்த அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
  • கண்காணிப்பு பணிகளுக்கென மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைளை மேற்பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 200 வீரர்கள் கொண்ட 8 குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள விரைந்துள்ளனர்.
  • 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 4,967 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன.
  • மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன.
  • புயல், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் TNSMART செயலி மூலமாகவும், Twitter, Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நேற்று (நவ.29) முதல் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து 1500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பொதுவான முன்னெச்சரிக்கை நடைமுறை மூலம் 5.23 லட்சம் நபர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் வழங்கப்பட்டுள்ளன.
  • இன்று (நவ.30) காலை 8 மணி முதல் புழல் நீர்த்தேக்கத்திலிருந்து 2000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பொதுவான முன்னெச்சரிக்கை நடைமுறை மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது.
  • பெருநகர சென்னை மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், தமிழ்நாடு கமாண்டோ படையினைச் சார்ந்த 50 வீரர்கள் கொண்ட 2 குழுக்களும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினைச் சார்ந்த 25 வீரர்கள் கொண்ட ஒரு குழுவும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
  • சென்னையில் 162 நிவாரண மையங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 296 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வின் போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, துணை மேயர் மு. மகேஷ் குமார், வருவாய் நிருவாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன், பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் எஸ்.ஏ. ராமன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x