Published : 30 Nov 2023 08:48 AM
Last Updated : 30 Nov 2023 08:48 AM
குன்றத்தூர் / திருவள்ளூர்: தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவ மழையால் சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் நீர் பிடிப்பு பகுதிகளிலிருந்து சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஏற்கெனவே விநாடிக்கு 25 கன அடி என வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீரின் அளவு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 200 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு, 24 அடி உயரம் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 3,210 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 22.35 அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 514 கன அடியாகவும் இருந்தது. ஆகவே,காலை 9 மணியளவில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இச்சூழலில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து அதிகரித்து வந்த நீர் வரத்து நேற்று மாலை விநாடிக்கு 1,100 கன அடியாக இருந்தது.
ஆகவே, நேற்று மாலை 4.30 மணியளவில், செம்பரம்பாக்கம் ஏரிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அதே போல், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் உள்ள சென்னை குடிநீர் ஏரிகளில், நேற்று காலை புழல் ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 570 கன அடியாக இருந்தது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு, 21.20 அடி உயரம் கொண்ட அந்த ஏரியின் நீர் இருப்பு,2,862 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 19.25 அடியாகவும் இருந்தது.
ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை 4 மணி முதல் புழல் ஏரியிலிருந்து, விநாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஏரிக்கு வரும் நீர்வரத்தின் அளவை பொறுத்து, உபரி நீர் திறப்பின்அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதால், நாரவாரி குப்பம், வடகரை, கிராண்ட் லைன்,புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான் குப்பம் ஆகிய பகுதிகளில் புழல் ஏரி உபரி நீர் கால்வாயின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்.
அதுமட்டுமல்லாமல், பூண்டி ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 760 கன அடியாக உள்ளது. எனவே, 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 2,006 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 31.10 அடியாகவும் உள்ளது. 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு, 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 393 கன அடியாக இருக்கிறது. ஆகவே, சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 795 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 16.83 அடியாகவும் இருக்கிறது.
500 மில்லியன் கன அடி கொள்ளளவு, 36.61 அடி உயரம் உள்ள கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 50 கன அடியாக உள்ளது. ஆகவே, அந்த ஏரியின் நீர்இருப்பு 452 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 35.19 அடியாகவும் உள்ளது. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகியவையின் கீழ் உள்ள 1,146 ஏரிகளில் 85 ஏரிகள் முழுமையாகவும், 91 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலாகவும், 305 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலாகவும் நிரம்பியுள்ளன என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT