Published : 30 Nov 2023 05:40 AM
Last Updated : 30 Nov 2023 05:40 AM

அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது ஏன்? - பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகி விளக்கம்

ஈரோடு: பால் கொள்முதல் விலையை அதிகரிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அமைச்சர் உறுதி அளிக்காததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலப் பொருளாளர் ஏ.எம்.முனுசாமி தெரிவித்தார்.

பல்வேறு பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன், பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று முன்தினம் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலப் பொருளாளர் ஏ.எம்.முனுசாமி ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பால் உற்பத்தியாளர்களுடனான பேச்சுவார்த்தையில், அரசுசெய்த சாதனைகளைப் பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார். ஆனால், தனியாருக்கு இணையாக பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 வீதம்உயர்த்துவது குறித்து பேசவில்லை. இதுகுறித்து முதல்வர் அறிவிப்பார் எனத் தெரிவித்தது ஏமாற்றம் அளித்தது.

கர்நாடகாவில் 1.50 கோடி லிட்டர்பால் உற்பத்தியாகி, அதில் அரசு 60 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. குஜராத்தில் 1.25 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகி, அமுல் நிறுவனம் 75 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்கிறது.

ஆனால், தமிழகத்தில் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகும் நிலையில், ஆவின் நிறுவனம் 29 லட்சம் லிட்டரை மட்டுமே கொள்முதல் செய்கிறது. இதை உயர்த்த புதிய அறிவிப்பு ஏதுமில்லை.

பால் உற்பத்தியை அதிகரிக்க அரசு சார்பில் புதிதாக கறவை மாடுகள் வாங்கிக் கொடுத்தாலும், சில மாதங்களுக்கு ஆவினுக்கு பால் வழங்கிவிட்டு, அதிக விலை கிடைப்பதால் தனியார் பக்கம்தான் அவர்கள் செல்வார்கள்.

மாநில அளவில் 9,000 பால் கூட்டுறவு சங்கங்கள் உள்ள நிலையில், 3,496 சங்கங்களுக்கு மட்டுமே பால் அளவு கண்டறியும் டிஜிட்டல் மீட்டர் வழங்க உள்ளனர். கர்நாடகா, கேரளா, குஜராத்தில் பாலுக்கு ஊக்கத்தொகை தருகின்றனர். தமிழகத்தில் இதுவரை வழங்கவில்லை. மேலும், பால்கூட்டுறவு ஒன்றியப் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு குறித்தும் பேசவில்லை.

கறவையாளர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டத்தில் விபத்து மரணத்துக்கு ரூ.3 லட்சம் வழங்குவதை கூடுதல் பிரீமியம் பெற்று, ரூ.10 லட்சமாக உயர்த்தக் கோரினோம் அதற்கும் பதில் இல்லை. பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் தரப்பிலான கோரிக்கைக்கு எந்த தீர்வும் இல்லாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மேலும் எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x